ஐபிஎல் 2024 2வது பகுதி வெளிநாட்டுக்கு மாற்றப்படுகிறதா?.. பிசிசிஐ தரப்பில் வெளியான புதிய செய்தி

0
111
BCCI

மார்ச் 22ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனுக்கு முதல் 15 நாட்களுக்கு மட்டுமான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இதில் 21 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால், தேர்தல் ஆணையம் தேதியை வெளியிட்ட பின், அதற்கேற்றபடி ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு இதேபோல இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் இரண்டாவது ஐபிஎல் சீசன் முழுக்க முழுக்க தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேடிலும், 2021 ஆம் ஆண்டு மீண்டும் கொரோனா தாக்குதல் காரணமாக இரண்டாம் பகுதி சீசன் யுனைடெட் அரபு எமிரேடிலும் கொண்டு நடத்தப்பட்டது.

- Advertisement -

இந்த மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்து விடும் என்று தெரிகிறது. தேதிகளைப் பார்த்த பின்னால் பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க காத்திருப்பதாகவும், அதிகப்படியாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி துபாய்க்கு செல்லவே வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது இந்தியாவில் தேர்தல் நடக்க இருப்பதால், மேற்கொண்டு தொடரை இந்தியாவில் வைத்து நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பாதுகாப்புக்கு காவலர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், பாதுகாப்பு பிரச்சனையை அடிப்படையில் வைத்து, ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனின் இரண்டாம் பாதியை துபாயில் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கி சேகரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் தொடரின் இரண்டாவது பகுதி துபாயில் மாற்றப்படுகிறது என்றால், அதற்கேற்றவாறு தங்கள் அணி வீரர்களுக்கான விசா பிரச்சனைகளை முடிப்பதற்கு இப்பொழுதே அணிகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ தரப்பு அதிகாரி ஒருவர் கூறும் பொழுது ” இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும். அதன் பிறகு துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை மாற்ற வேண்டுமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்யும். தற்போது சில பிசிசிஐ அதிகாரிகள் துபாயில் போட்டிகளை நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். ஐபிஎல் இரண்டாம் பகுதி இதை வைத்து துபாய்க்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : மதியம் 2 மணி to நைட் 12.45 வரைக்கும் ப்ராக்டிஸ்.. அவனுக்கு கிரிக்கெட்தான் சோறு – ராபின் உத்தப்பா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது ஐபிஎல் தொடரில் கடைசி ஆண்டாக இருக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடர் இந்தியாவை விட்டு வெளியில் செல்லும் பொழுது, அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இது பெரிய இழப்பாக இருக்கும். அவர் இந்தியாவில் வைத்து இந்திய ரசிகர்கள் முன்னால் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாட விரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.