2024 ஐபிஎல் 17வது சீசனில், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், கடந்த ஆண்டு ரன்னர் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக்கம் மைதானம் பழையபடி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாமல் மாறியிருப்பதால், சிஎஸ்கே அணி தீக்சனாவை வெளியில் வைத்து பதிரனாவுக்கு வாய்ப்பு கொடுத்தது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்தரா 46(20), கேப்டன் ருதுராஜ் 46(36), ரகானே 12(12) ரன்கள் என வெளியேறினார்கள். சிஎஸ்கே அணிக்கு இதனால் நல்ல துவக்கம் கிடைத்தது. எனவே இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 200 ரன்கள் தாண்டும் என்பது உறுதியானது.
இதற்கேற்றபடி உள்ளே வந்த சிவம் துபே எடுத்ததும் அதிரடியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 23 பந்தில் இரண்டு பவுண்டரி ஐந்து சிக்ஸர் என 51 ரன்கள் குவித்தார். இளம் அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி ஆறு பந்துகளில் அதிரடியாக 14 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த ரவீந்திர ஜடேஜா மூன்று பந்தில் ஏழு ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டம் இழக்காத டேரில் மிட்சல் 20 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ரஷித் கான் நான்கு ஓவர்களுக்கு 49 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் கில் 8(5), சகா 22 (15), சாய் சுதர்சன் 37 (31), விஜய் சங்கர் 12 (12), டேவிட் மில்லர் 21 (16), அசமத்துல்லா ஓமர்சாய் 10(11), ராகுல் திவாட்டியா 6(11), ரஷீத் கான் 1(2) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். உமேஷ் யாதவ் 10 (11), ஸ்பென்சர் ஜான்சன் 5(5) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் தரப்பில் தீபக் சகர், முஸ்தபிஷூர் ரஹ்மான், துசார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : வீடியோ: 2.27 மீட்டர்.. 42 வயது.. காற்றில் பறந்து பிடித்த தோனி.. 3 வருஷம் ஐபிஎல் ஆடுவார் போல
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே அணி தோற்றது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டு முதல் போட்டியில் தோற்றது. அடுத்து இதே ஆண்டில் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு போட்டியிலும் வென்றது. இந்த நிலையில் மூன்றுக்கு இரண்டு என சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பின்தங்கி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்றுக்கு மூன்று என கணக்கை சமன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் எல்லா அணிகளுக்கு எதிராகவும் குறைந்தபட்சம் 50 சதவீத வெற்றியை வைத்திருக்கும் ஒரே அணியாக சிஎஸ்கே அணி சாதனை படைத்திருக்கிறது.