ஐபிஎல் தொடர் பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் கூட, இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய இளம் திறமைகளை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய மேடையாக இருந்து வருகிறது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை விட அதிக தரம் கொண்டது ஐபிஎல் தொடர். எனவே இதில் வாய்ப்பு பெற்று தங்களை நிரூபிக்கும் இந்திய இளம் வீரர்கள், சீக்கிரத்தில் இந்திய தேசிய அணிகள் விளையாடும் வாய்ப்பையும் பெற்று விடுகிறார்கள்.
கடந்த காலத்தில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஹர்திக் பாண்டியா என நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு வந்தார்கள். சமீப காலத்தில் ரிங்கு சிங், அர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்றவர்கள் இந்திய அணிக்கு வந்தார்கள். வீரர்களை பரிசோதித்துப் பார்ப்பதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐபிஎல் தொடர் நல்ல வாய்ப்பாக இருப்பதில் சந்தேகம் கிடையாது.
இந்த நிலையில் இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், அதிகபட்சமாக மணிக்கு 156 கிலோ மீட்டர், குறைந்தபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, நான்கு ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டுமே தந்து, பஞ்சாப் கையில் இருந்த போட்டியை லக்னோ கைகளுக்கு மாற்றிய இளம் இந்திய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
பொதுவாக இந்தியாவில் பேட்ஸ்மேன்கள் சரளமாக வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் எப்பொழுதும் வேகப்பந்து வீச்சுக்கு இந்திய கிரிக்கெட்டில் பற்றாக்குறை இருந்து வந்திருக்கிறது. இந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்க இந்த பற்றாக்குறை ஓரளவுக்கு தீர்ந்தது. ஆனாலுமே புதிய வேகப்பந்து வீச்சு திறமைகள் கிடைத்தால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் கவனமாக பார்க்கும். எனவே இந்திய கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ் பேசும்பொழுது “பெரிய போட்டிகளில் அறிமுகம் ஆகும் பொழுது பதட்டம் இருக்கும் என எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்போதும் முதல் பந்திற்கு பிறகு போய்விடும். நான் என்னுடைய அறிமுக போட்டியில் அதிக பதட்டத்திற்கு உள்ளாகாமல், ஸ்டெம்ப் லைனில் பந்தை வைக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் முடிந்தவரை வேகத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க : ராஜதானி எக்ஸ்பிரஸ்.. அசால்டா 155.8 கி.மீ வேகம்.. லக்னோ-வின் யார் இந்த மயங்க் யாதவ்?
அதே சமயத்தில் ஆரம்பத்தில் வேகத்தை மாற்றி மாற்றி கொஞ்சம் மெதுவாக வீச கூட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இந்த விக்கெட் வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக உதவியது. மேலும் அணியின் கேப்டன் என்னிடம் தொடர்ந்து வேகமாகவே வீசும் படி கூறினார். என்னுடைய அறிமுக விக்கெட்டாக பேர்ஸ்டோ இருந்ததை மறக்க முடியாது. கடந்த சீசனில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. இளம் வயதிலேயே அறிமுகமாகி விட வேண்டும் என்ற இலக்கை வைத்திருந்தேன். ஆனால் காயம் நாம் நினைப்பதை செய்ய விடுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.