நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்ட மிக முக்கியமான போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் பேட்டிங்கில் அதிரடி காட்டி, இங்கிலாந்து அணிக்கு வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் ரன் சேசிங்கை எப்படி எடுத்துச் சென்றார்கள்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் 17 பந்தில் 36 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 32 பந்தில் 36 ரன்கள், ஜான்சன் சார்லஸ் 34 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் வந்த மொயின் அலி பத்து பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் பில் சால்ட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி போட்டியை ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடமிருந்து பறித்து விட்டார்கள்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 15 ஓவர்களில் 141 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை அதிரடியாக கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் 16வது ஓவரை ரோமாரியோ ஷெப்பர்ட் வீச, அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் பில் சால்ட் 30 ரன்கள் குவித்து, ஒரே ஓவரில் போட்டியை முடித்து விட்டார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 47 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 17.3 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது வென்ற பில் சால்ட் பேசும் பொழுது “நான் எதையும் அதிகம் முன்னோக்கி சிந்திக்க விரும்பவில்லை. நான் இங்கு விளையாட விரும்புகிறேன். ஒரு நல்ல அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னிடம் ஜானி பேர்ஸ்டோ எப்படி போட்டியை எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து பேசினார். நடுவில் நான் அதிக பந்துகளை சந்திக்காத நேரம் இருந்தது. பவுண்டரிகள் அப்பொழுது எனக்கு வரவில்லை. ஜானிதான் ரிஸ்க் எடுத்து விளையாடி என் மீது இருந்தஅழுத்தத்தை எடுத்தார். இந்த வெற்றியில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இதையும் படிங்க : 4,6,4,6,6,4… ஒரே ஓவரில் மேட்சை முடித்த சால்ட்.. வெ.இ எதிரா 2 இமாலய சாதனைகள்.. இங்கிலாந்து வெற்றி
மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது. எப்படியும் வேகப்பந்துவீச்சு வரும் என்று நினைத்தேன். அடுத்து ஒரு பக்கமாக காற்று வீசியது. மேலும் ஒரு பக்கத்தில் மைதானம் சிறியதாகவும் இருந்தது. இதை வைத்துதான் என்னை நம்பி ஷெப்பர்ட் ஓவரில் 30 ரன்கள் எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.






