இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் செயின்ட் லூசியா மைதானத்தில் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் சால்ட் அதிரடியில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜான்சன் சார்லஸ் 34 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரன் 32 பந்தில் 36 ரன்கள், கேப்டன் ரோமன் பவல் 17 பந்தில் 36 ரன்கள், செர்பான் ரூதர்போர்டு 15 பந்தில் 28* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் நான்கு ஓவர் பந்து வீசி 21 ரன் விட்டு தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 7.4 ஓவர்களில் 64 ரன்கள் வந்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 22 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த முறை மூன்றாவது இடத்தில் அனுப்பப்பட்ட மொயின் அலி 10 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் சேர்ந்து ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தார்கள். பத்து ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து கடைசி ஐந்து ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் 16 வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்ட் வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட பில் சால்ட் 4,6,4,6,6,4 என 30 ரன்கள் அடித்து அங்கேயே போட்டியை முடித்து விட்டார். இறுதியாக பில் சால்ட் 47 பந்தில் 7 பவுண்டரி 5 சிக்ஸர் ரன் 87* ரன், ஜானி பேர்ஸ்டோ 26 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸர் உடன் 48* ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : அமெரிக்காவுல தேவைப்படல உண்மைதான்.. ஆனா இங்க இவங்க 2 பேர்ல கண்டிப்பா 1 ஆள் இருப்பாங்க.. டிராவிட் பேட்டி
பில் சால்ட் இதுவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒன்பது டி20 போட்டிகளில் 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் உடன் 478 ரன் குவித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் இவர்தான். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 32 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்தான். மேலும் நான்கு பந்துகளுக்கு ஒருமுறை அவர் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!