INDvsENG டெஸ்ட்.. 5ஓவர் 7ரன் 5விக்கெட்.. ஜடேஜாவா மாறிய தீப்தி சர்மா.. இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா!

0
292
Deepti

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, தற்பொழுது ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பெண்கள் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டி நேற்று மும்பை டிஒய்.பாட்டில் மைதானத்தில் தொடங்கியது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு சதீஷ் சுபா 69, கேப்டன் கவுர் 49, யாஷிகா பாட்டியா 66, தீப்தி சர்மா 67, சினேகா ராணா 30 ரன்கள் எடுக்க, 104.3 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் லாரன்ஸ் பெல் மற்றும் சோபியா தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்க, பொதுவாக இந்தியாவிற்கு டெஸ்ட் விளையாட வரும் வெளிநாட்டு அணிகளுக்கு இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு எப்படி சிம்ம சொப்பனமாக இருக்குமோ, இந்த போட்டியிலும் அப்படியே இருந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு நாட் சிவியர் பிராண்ட் மட்டுமே தாக்குப்பிடித்து 59 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக டேனி வைட் 19 ரன்கள் எடுத்தார். 35.3 ஓவரில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா போல் பந்துவீசும் இடது கை சுழற் பந்துவீச்சு வீராங்கனை தீப்தி சர்மா 5.3 ஓவர்கள் பந்து வீசி, 4 மெய்டன்கள் செய்து, 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சினேகா ராணா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 50 ரன்கள் தாண்டி இருக்கிறது. இதன் மூலம் 344 ரன்கள் தாண்டி முன்னிலை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.