இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. அடுத்து கே எல் ராகுல் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது.
இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சமன் செய்த இந்திய அணி நேற்றுடன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு இருக்கும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டி20 தொடருக்கு காயத்தின் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இடம் பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக திரும்புவாரா? என்பதும், இல்லை பரிசோதனை முயற்சிகளுக்காக அவரது இடத்தை விட்டுத் தந்து, வேறொரு புதிய கேப்டனாக யார் வருவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி பஞ்சாப் மொகாலி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்க இருக்கிறது. இரண்டாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்தூர் கோல்கர் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
இந்தத் தொடரை டிவியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ சினிமா மற்றும் வெப்சைட் ஒளிபரப்பு செய்கிறது.
இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணி ஐந்து டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு போட்டி முடிவு காணப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான தனது முதல் வெற்றிக்காகஆப்கானிஸ்தான் காத்திருக்கிறது.
இதற்கு அடுத்து ஜனவரி 25ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வரும் இங்கிலாந்து அணி உடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது!