இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால், இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கூடுதலாக அமைந்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் விளையாடிவரும் இந்திய அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெற்றி சதவீதம் குறைந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது இந்திய அணி நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு கூடுதல் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் முறையே தென்னாப்பிரிக்கா (71.43%) மற்றும் ஆஸ்திரேலியா (70.00%) அணிகள் இருக்கின்றன. இலங்கை அணி 53 சதவீத வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதம் இருக்கின்றன. அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் வங்கதேச அணியுடனும், நான்கு டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா அணியுடனும் நடக்கவிருக்கிறது. அனைத்து போட்டியையும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் வெற்றி சதவீதம் 68.05 ஆக உயரும். பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. தற்போது 51.85% வெற்றிகளுடன் உள்ளது. இதில் ஏதேனும் ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் அல்லது தோல்வியில் முடிந்தால் பாகிஸ்தான் அணியால் 68.05 என்ற வெற்றி சதவீதத்தை தாண்ட இயலாது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.
ஆஸ்திரேலியா அணிக்கு 9 டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. அதில் நான்கு டெஸ்ட் போட்டிகள் இந்திய அணியுடன் நடக்கவிருக்கிறது. இந்த நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலிய அணியால் 68க்கும் அதிகமான வெற்றி சதவீதத்தை பெற இயலாது. இதுவும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.
இலங்கை அணிக்கு மீதம் 2 போட்டிகள் மட்டுமே இருக்கின்றன. ஆகையால் இந்திய அணிக்கு போட்டியாக இலங்கை இருக்காது என தெளிவாக தெரிகிறது. ஆனால் தென்னாபிரிக்கா அணியால் இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும். தென் ஆப்பிரிக்காவிற்கு இன்னும் 8 டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஆறு போட்டுகளில் வென்றுவிட்டால், இந்திய அணியை விட அதிக வெற்றி சதவீதத்தை தென் ஆப்பிரிக்காவால் பெற்றுவிட முடியும். ஏதேனும் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவினால் மட்டுமே 68.05க்கும் கீழே வெற்றி சதவீதத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் இந்திய அணிக்கு கீழே இருக்க வாய்ப்புள்ளது.
மேற்கூறிய அனைத்தும் நடைபெற்றுவிட்டால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடலாம். இல்லையேல் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இரு அணிகளும் விளையாடலாம். இந்திய அணிக்கு இருக்கும் ஒரே சவால், விளையாடும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயம் வென்றாக வேண்டும். ஏதேனும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தால் இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இயலாது.