மற்ற நாடுகளுக்கு தலைமை பயிற்சியாளராக விளங்கிய 7 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
2108
Robin Singh and Sandeep Patel

இந்திய கிரிக்கெட் அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களில் பலர் பயிற்சியாளராகவும் இருக்கின்றனர். உதாரணமாக ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே. ஒரு நாட்டின் பயிற்சியாளர் என்ற பொறுப்பை எளிதில் பெற்றுவிட முடியாது. முதலில் நிர்வாகத்தில் (பிசிசிஐ) அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பிக்கபட்டார் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.

ஒரு நாட்டிற்காக விளையாடிய வீரர், அதே நாட்டிற்கு மட்டும் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு விதியும் இல்லை. 2011 உலகக் கோப்பையில் நம் இந்திய அணியை வழிநடத்திய பயரிசியாளர், கேரி கிரிஸ்டன். தென்னாபிரிக்கா அணியில் உலகக்கோப்பை வெல்ல முடியாத ஏக்கத்தை இந்திய அணியின் மூலம் தீர்துக்கொண்டார். இதேபோல், இந்திய வீரர்கள் மற்ற நாட்டிற்கும் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்து உள்ளனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

1. லால்சந்த் ராஜ்புத் – ஆப்கானிஸ்தான் & ஜிம்பாப்வே

இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் மேனஜராக இருந்தார். பின்னர், 2008ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்தார்.

இன்சமாம் உல் ஹக் பயிற்சி செய்து கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது லால்சந்த் ராஜ்புத், ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

2. சந்தீப் பட்டேல் – கென்யா

சந்தீப் பட்டேல், இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 3000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இவர் மிடில் ஆர்டரில் அடித்து ஆடக் கூடிய வீரர்களில் ஒருவர். மேலும், இவர் மீடியம் பேஸராகவும் பங்களித்துள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணிக்காகவும் இவர் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன்பிறகு கென்யா அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்தார். 2003 உலகக்கோப்பையில் யாரும் எதிர்பாராத வகையில் கென்யா அணியை அரை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார்.

3. ராபின் சிங் – ஹாங் காங் & அமெரிக்கா

ராபின் சிங், இந்திய அணியின் ஆல்ரவுண்டராக 136 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடியுள்ளார். 2001ல் ஓய்வு பெற்ற ராபின் சிங், பல அணிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.

ஐ.பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறிது காலம் திகழ்ந்தார். கரீபியன் பிரீமியர் லீக்கில், பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்கு பயிற்சி அளித்துள்ளார். சர்வதேச அளவில், இவர் இரண்டு நாட்டிற்க்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். முதலில் ஹாங் காங் பின்னர் அமெரிக்கா.

4. அருண் குமார் – அமெரிக்கா

Arun Kumar USA Coach

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் அருண்குமார். கர்நாடக அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்துள்ளார். ஆனால் அவருக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐ.பி.எலில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்பொழுது இவர் அமெரிக்கா அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த காலத்தை காட்டிலும், அமெரிக்கா அணி இப்போது சிறப்பாகவே ஆடி வருகிறது. வருகின்ற காலங்களில், அருண்குமார் அவ்வணியை மேலும் உயர்திக்காடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. ஹனுமான்த் சிங் – கென்யா

இந்திய அணிக்காக ஹனுமான்த் சிங், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மேனேஜராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர், கென்யா அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 1996 உலகக் கோப்பையில் கென்யா அணியை இவர் தான் பயிற்சி செய்தார்.

6. சமீர் டிகே – ஹாங் காங்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சமீர் டிகே, 6 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். பெரிதாக வாய்ப்புக் கிடைக்காததால் இவர் பாதியிலேயே நம்பிக்கையை இழந்து விட்டார். பின்னர், 2007ல் ராபின் சிங்கிற்கு பதிலாக ஹாங் காங் அணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டு தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையை தொடர்ந்தார்.

7. டி குமரன் – அமெரிக்கா

டி குமரன், முன்னாள் தமிழக வீரர் ஆவார். இந்தியன் கிரிக்கெட் லீக்கில் சிறிது காலம் ஆடிய பிறகு இவர் அமெரிக்க நாட்டிற்க்கு நகர்ந்தார். சமீர் டிகே, ஹாங் காங் அணிக்கு பணியாற்றியது போல இவரும் ராபின் சிங் இல்லாத நேரத்தில் அமெரிக்க அணியை வழிநடத்தினார்.