இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்… சோகமாக முடிந்த இரண்டாம் நாள்… 5 விக்கெட்டுகள் இழந்து பரிதாப நிலையில் இந்தியா!

0
458

ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 151/5 என பரிதாப நிலையில் உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்கள் அடித்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்கள் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்கள் அடித்திருந்தனர்.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் அபாரமாக துவங்கினர். 95 ரன்களில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32 வது சதத்தை பூர்த்தி செய்தார். டிராவிஸ் ஹெட் நன்றாக ஆட்டத்தை துவங்கி 150 ரன்கள் கடந்தார். ஹெட் 163 ரன்கள் அடித்திருந்தபோது சிராஜ் பந்தில் அவுட்டானார். ஸ்மித்-ஹெட் ஜோடி 285 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த ஸ்மித் விக்கெட்டை சர்தல் தாக்கூர் எடுத்தார். இவர் 121 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 48 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிராஜ் நான்கு விக்கெட்டுகளும், சமி மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

469 ரன்கள் எனும் முன்னிலையை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோதப்பினர். ரோகித் சர்மா தனது மோசமான ஃபார்மை மீண்டும் தொடர்ந்தார். இவர் 15 ரன்கள் அடித்திருந்தபோது கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் கில் அணியை எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, தவறாக கணித்து ஸ்காட் போலந்து பந்தில் போல்ட் ஆனார். இவர் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்

- Advertisement -

கவுண்டி கிரிக்கெட்டில் சதங்களாக விளாசி வந்த புஜாரா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என கருதியிந்த நிலையில், துரதிஷ்டவசமாக கேமரூன் கிரீன் பந்தில் போல்ட் ஆனார். இவர் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். விராட் கோலி 14 ரன்களுக்கு ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை அளித்தனர். ஜடேஜா 48 ரன்களில் இருந்தபோது, நேத்தன் லயன் பந்தில் ஆட்டம் இழக்க மீண்டும் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.

அடுத்ததாக கேஎஸ் பரத் சில ஓவர்கள் தடுப்பு ஆட்டம் ஆடினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரகானே மற்றும் ஜடேஜா இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 71 ரன்கள் சேர்த்தனர். இது மட்டுமே இன்றைய நாளில் இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.