டி20 உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணி குறித்து ஆலோசனை மற்றும் தேர்வு இரண்டும் செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கவிருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டன. இந்திய அணி ஆசியகோப்பை தொடரில் பங்கேற்று வந்ததால், அந்த தொடர் முடிவுற்ற பிறகு வீரர்கள் தேர்வுக்கான ஆலோசனைகள் நடத்தப்படும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டன.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய தகவலின் படி, “இணையதளம் வாயிலாக செப்டம்பர் 12ஆம் தேதி மதியம், டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணி தேர்வு செய்யப்படுவது பற்றி ஆலோசனைகள் நடத்தப்படும். மேலும் வீரர்களின் தேர்வு அன்றே உறுதி செய்யப்படும்.” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரின் போது பயிற்சி செய்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியகோப்பை தொடரின் பாதியில் வெளியேறினார். அவரால் டி20 உலககோப்பையிலும் பங்கேற்க முடியாது என்ற தகவல்கள் வெளி வருகின்றன. இன்னும் சில தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் ஆசியக் கோப்பை தொடரில், காயம் காரணமாக, வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரும் தங்களது உடல்தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்குள் திரும்புகிறார்கள் என்ற தகவல்களும் அந்த பிசிசிஐ அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது. பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் இந்திய தேசிய அகடமையில் தற்போது பயிற்சி செய்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மற்றும் சில டி20 போட்டிகளில் ஹர்ஷல் பட்டேல்பங்கேற்கவில்லை. ஆனாலும் இந்திய அணிக்காக, 2022ம் ஆண்டு வேகப்பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். புவனேஸ்வர் குமார் இந்த ஆண்டு 31 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். ஆசியகோப்பையில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 19 விக்கெட்டுகளுடன் ஹர்ஷல் பட்டேல் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
முகமது சமிக்கு மீண்டும் டி20 அணியில் இடம் அளிக்கப்படுவது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும், ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்ற இரண்டு இளம் வேகம் பந்துவீச்சாளர்களில் ஒருவர் நிச்சயம் வெளியேற்றப்படுவர் என்கிற தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆவேஷ் காண எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால் வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக யாரேனும் ஒருவர் உள்ளே வரலாம். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷதிப் சிங் ஆசிய கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு இடம் அளிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
ஆல்ரவுண்டர் தீபக் சகர் இந்த அணியில் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது. மேலும் லெக் ஸ்பின்னர் இடத்தில் ரவி பிஷ்னாய் மற்றும் யுசி., சஹல் இருவரும் இருக்கின்றனர். சஹல் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கே அதிக அளவு வாய்ப்புகள் இருக்கின்றன. ரவி பிஸ்னாய் ஆசியக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக சூப்பர் ஃபோர் சுற்றில் மற்ற வீரர்கள் சொதப்பியபோது, இவர் நன்றாக பந்து வீசினார்.
முன்னதாக டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகின.. அதன்படி, செப்டம்பர் 12ஆம் தேதி வீரர்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அதில் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழுவினர் சிலர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆலோசனையில் வீரர்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு, செப்டம்பர் 15ஆம் தேதி முழு பட்டியல் வெளியிடப்படலாம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் இரண்டு வாரங்கள் குவாலிஃபயர் போட்டி நடத்தப்பட்டு, சில அணிகள் அதில் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு உலக கோப்பை தொடர் துவங்கும்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் தேர்வுக்குழுவினர் மிகுந்த கவனத்துடன் டி20 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக ஐசிசி தொடரை இந்திய அணி வெல்லவில்லை. ஆகையால் இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.