அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பைக்காண வெற்றி கொண்டாட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. வெற்றி குறித்து மைதானத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது டி20 உலக கோப்பை தொடர் குறித்து பேசிய விராட் கோலி, இவர் நமது அணியில் விளையாடுவது எங்களது அதிர்ஷ்டம் என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை வென்ற இந்திய அணி, பார்படாசில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இந்திய வீரர்களை பார்படாசிலிருந்து அழைத்து வர சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருந்து கிளம்பிய இந்திய வீரர்கள் நேற்று காலை 6 மணி அளவில் டெல்லி வந்து அடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை முடித்துவிட்டு அங்கிருந்து மும்பை கிளம்பிய இந்திய வீரர்கள் கடற்கரையில் இருந்து மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது மும்பை ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
வான்கடே மைதானத்திற்கு சென்றவுடன், ஒவ்வொரு வீரரும் தங்களது உலக கோப்பை குறித்து சில விஷயங்களை கூற, அதன் பிறகு பேசிய விராட் கோலி பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் “முதலில் மும்பை தெருக்களிலும், மைதானத்திலும் எங்களுக்கான வரவேற்பை அளித்த மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. இதனை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பை மீண்டும் நம்மிடம் இருந்து நழுவ போகிறதோ என்று தோன்றியது.
தோற்கும் சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களை ஆட்டத்திற்கு கொண்டு வந்த பும்ராவை நான் பாராட்ட விரும்புகிறேன். கடைசி ஐந்து ஓவர்களில் அவர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த ஐந்தில் அவர் வீசிய இரண்டு பந்துகள் மிகவும் அபாரமானது. பும்ராவுக்கு ஒரு பெரும் கரகோஷம். வாழ்நாளில் இது போன்ற ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பது அரிது. இவர் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் அதிர்ஷ்டம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஜிம்பாப்வே டி20.. நாளை போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் XI.. நெருப்பு மாதிரி இளம் படை
மைதானத்தில் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிசிசிஐ செயலாளர் அறிவித்த 125 கோடி ரூபாய் இந்திய வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மைதானத்தில் வீரர்களை நினைவு கூறும் வகையில் உலக கோப்பையில் அவர்கள் செயல்பட்ட விதத்தை வீடியோவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது.