டி20 உலககோப்பை.. இந்திய அணி எதிரா.. அமெரிக்கா அணி கேப்டனாக ஆட போகும் இந்திய வம்சவளி வீரர்

0
5671

டி20 உலகக் கோப்பைத் தொடரானது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. ஜூன் 1ல் முதல் போட்டியும் ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன. மொத்தம் 55 போட்டிகள் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளன. உலகக்கோப்பைத் தொடரை முதல் முறையாக அமெரிக்கா நடத்துவதால் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. இத்தொடரில் இணை அணியாக அமெரிக்க அணியும் பங்கேற்க இருக்கிறது.

இதில் முன்னணி அணிகளான இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முக்கிய பங்கு வகிக்கும். இதில் அமெரிக்க அணியும் பங்கேற்க இருப்பதால் அந்நாட்டு மக்களுக்கு இது உற்சாகத்தை அளித்துள்ளது. இதில் சுவாரஸ்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் அமெரிக்கா அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் ஆவார்.

- Advertisement -

குஜராத்தை சேர்ந்த மோனாங்க் பட்டேல் என்ற இளைஞர்தான் அமெரிக்க அணியின் இப்போதைய கேப்டன். இவர் குஜராத்தில் ஆனந்த் பட்டேல் நகரில் மே 1,1993 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மிகத் திறமையான விக்கெட் கீப்பரும் கூட. அவரது கிரிக்கெட் பயணம் குஜராத்துக்காக 16 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளில் விளையாடுவதில் இருந்து தொடங்கியது.

பிறகு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த அவர், 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 20-20 அமெரிக்காஸ் தகுதிச் சுற்று போட்டியில் ஆறு போட்டிகளில் விளையாடி 208 ரன்கள் குவித்தார். அத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் ஆனார். மேலும் தனது மிகச் சிறப்பான பேட்டிங் திறமையால் 2018 மற்றும் 19 இல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற சூப்பர் 50 போட்டியில் அபாரமான சதம் அடித்து ஒரு அமெரிக்க பேட்ஸ்மனின் முதல் வரலாற்று சதத்தினை பதிவு செய்தார்.

ஏழு போட்டிகளில் விளையாடி 290 ரன்கள் குவித்து அமெரிக்காவின் அதிக ரன் அடித்தவராக பட்டியலில் இணைந்தார். பட்டேல் தனது பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளைச் செய்து அமெரிக்கா அணியில் தொடர்ந்து தனது இடத்தினைப் பதிவு செய்தார். 2021 ஆம் ஆண்டு ஓமன் முத்தரப்புத் தொடரில் ஒரு நாள் போட்டியில் சதம் விளாசினார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆன்டிகுவாவில் நடைபெற்ற 2021 ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை அமெரிக்காஸ் குவாலிபயர் போட்டிக்கான அமெரிக்க அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டது இவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் அடங்கும். வரவிருக்கும் டி20 உலக கோப்பைத் தொடரில் அமெரிக்க அணி இவரது தலைமையில் நம்பிக்கைக்கு உரிய அணியாக களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இவரது ஆட்டத்தினை காண இந்திய ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். ஜூன் 12 இந்திய அமெரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டியில் அவரின் கேப்டன்சியைக் காண ரசிகர்கள் காத்து வருகின்றனர்.