இரண்டு முறை யு-19 உலகக் கோப்பையில் பங்கேற்ற 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
3262
Ravindra Jadeja World Cup

தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பல படிகளைக் கடக்க வேண்டும். மாநில அளவில் சிறப்பித்த பிறகு, தேசிய அணிக்காக யு-19 உலகக் கோப்பை ஆடுவர். இவ்வுலகிற்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க கிடைத்த முதல் வாய்ப்பாக கிரிக்கெட் வீரர்கள் எண்ணுவர். விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங், பென் ஸ்டோக்ஸ் என பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்றுள்ளார்கள்.

யு-19 உலகக் கோப்பை தொடர், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். 16 வயதான வீரர், இருமுறை இத்தொடரில் பங்கேற்கலாம். பெரும்பாலான வீரர்களுக்கு தங்களுடைய 17வது வயதில் தான் இத்தொடரில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். அதனால் அவர்கள் ஒரு முறை மட்டுமே இத்தொடரில் விளையாடுவர். இந்தக் கட்டுரையில், இரண்டு முறை யு-19 உலகக் கோப்பையில் பங்கேற்ற வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. சர்ப்ராஸ் கான் – 2014 & 2016

Sarfaraz Khan U-19 WC

மும்பை நகரத்தைச் சேர்ந்த இளம் வீரரான சர்ப்ராஸ் கான், இரண்டு யு-19 உலகக் கோப்பையில் விளையாடி உள்ளார். இரண்டு தொடரிலும் அவரது சராசரி 70க்கும் மேல். முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

2018 ஐ.பி.எலில், விராட் கோஹ்லி மற்றும் ஐபி டிவில்லியர்ஸுடன் இவரும் பெங்களூர் அணியால் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். தற்போது இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சீனியர் இந்திய அணிக்காக இவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரிக்கி பூய் – 2014 & 2016

சர்ப்ராஸ் கானைப் போல் இவரும் 2014 & 2016 யு-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். 2014ல் நான்கு போட்டிகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். மீண்டும் 2016ம் ஆண்டு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

- Advertisement -

அதில் நிச்சயம் நன்றாக ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்தத் தொடரிலும் அவர் சிறப்பிக்கத் தவறினார். மூன்று போட்டிகளில் 47 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஐ.பி.எலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியுள்ளார். அதிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

3. அவேஷ் கான் – 2014 & 2016

வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான், 2014 மற்றும் 2016 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். 2014ல் அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் 1 விக்கெட் எடுத்தார்.

2016ல் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார். கிடைத்த வாய்ப்பை துல்லியமாக பயன்படுத்தினார். ஆறு போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு 4/32 ஆகும். ஐ.பி.எலிலும் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

4. விஜய் ஜோல் – 2012 & 2014

ஐ.பி.எலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய விஜய் ஜோல் இரண்டு யு-19 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளார். இவர் இடதுகை – மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். 2012ல் ஆறு போட்டிகளில் 151 ரன்கள் அடித்தார்.

மேலும், அவ்வருடம் இந்திய அணி கோப்பையை வென்றது. 2016ல் ஐந்து போட்டிகளில் இவர் இடம்பெற்று இருந்தார். 24 சராசரியில் 120 ரன்கள் அடித்தார்.

5. ரவிந்திர ஜடேஜா – 2006 & 2010

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர், ரவிந்திர ஜடேஜா. பேட்டிங் & பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவார். இதைத் தவிர்த்து ஃபீல்டிங்கில் இவர் பங்களித்தது எண்ணிக்கையில் அடங்காத ஒன்று.

ஜடேஜா, 2006 மற்றும் 2008 யு-19 உலகக் கோப்பையில் விளையாடி உள்ளார். 2006ல் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஆடினார். அத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. இரண்டு வருடங்கள் கழித்து 2008ல் விராட் கோஹ்லி தலைமையில் கோப்பையை வென்றார்.