இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.
தொடரை கைப்பற்றிய இந்திய அணி
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த சூழ்நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் தொடரை நிர்ணயிக்கப் போகும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் மிடில் வரிசை வீராங்கனை ப்ரூக் ஹல்லிடே 96 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஸ்மிருதி மந்தனா அபார சதம்
இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக மந்தனா மற்றும் செபாலி வர்மா ஆகியோர் களம் இறங்க செபாலி 12 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து களம் இறங்கிய யாஷிகா பாட்டியா 35 ரன்கள் வெளியேற, அதற்குப் பிறகு மந்தனாவுடன் அணியின் கேப்டன் ஹெர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்றார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க:எங்க நாட்ல இந்திய அணி ஜெயிக்காது.. 2 மைதானமே போதும்.. உள் காரணம் இருக்கு – மேத்யூ ஹைடன் பேட்டி
122 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மந்தனா 100 ரன்கள் குவித்து தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலமாக இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அடித்திருந்த ஏழு சதங்கள் சாதனையை மந்தனா முறியடித்து அதிக சதங்கள் விளாசிய வீராங்கனையாக மாறியிருக்கிறார் மறுமுனையில் கேப்டன் கவுர் 63 பந்துகளில் 59 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி 44.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக விளையாடிய மந்தனா ஆட்டநாயகி விருதையும், தொடரில் சிறப்பாக விளையாடிய தீப்தி ஷர்மா தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.






