ஆதிக்கம்னா என்ன தெரியுமா.. 17 வருஷமாச்சு.. உலக சாதனை படைத்த இந்தியா.. பாவம் வெஸ்ட் இண்டீஸ்!

0
1001

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் களமிறங்கியது. உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், இந்திய அணியின் செயல்பாடுகள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்தது. இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி தட்டு தடுமாறி வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது.

2வது போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லையென்றாலும், பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மோசமாகவே இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமலேயே இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியான அரைசதம் காரணமாக 50 ஓவர்களில் 351 ரன்கள் குவித்தது. இதையடுத்து சவாலான இலக்கை எதிர்நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரண்டன் கிங் – கைல் மேயர்ஸ் கூட்டணி களமிறங்கியது.

கடந்த போட்டியை சிறந்த தொடக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய வீரர் முகேஷ் குமார் முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த அணியின் தொடக்க வீரர் கிங் டக் அவுட்டில் வெளியேறினார். தொடர்ந்து முகேஷ் குமாரின் 2வது ஓவரில் கைல் மேயர்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் முகேஷ் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோரின் அபார பந்துவீச்சில் சிக்கி தவித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டை போல் சரிந்தனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியதால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் அதிரடி வீரர் ஹெட்மயர் 4 ரன்களில் வீழ்ந்தார்.

- Advertisement -

இப்படி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையாடினர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாகவும், 3 போட்டிகளில் அரைசதம் அடித்து மிரட்டிய இஷான் கிஷன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஒருநாள் தொடருக்கான கோப்பையை பெற்றுக் கொண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதனை முகேஷ் குமார் கைகளில் ஒப்படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2007 முதல் தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய 13 ஒருநாள் தொடர்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. எந்தவொரு அணிக்கு எதிராகவும் வேறு அணிகள் இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியதில்லை.

கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 1996 முதல் 2021 வரை, மொத்தமாக 11 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி 1999 முதல் 2022 வரை 10 ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது.