24 பந்து 26 ரன்.. தெ.ஆ-வை நிற்க வைத்து மேஜிக் செய்த இந்தியா.. 13 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றது

0
555
ICT

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பார்படாஸ் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதி கொண்ட இறுதிப்போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைத்தாலும் ரோஹித் சர்மா 5 பந்தில் 9 ரன், ரிஷப் பண்ட் 2 பந்தில் ரன் ஏதும் இல்லாமல், சூரியகுமார் யாதவ் 4 பந்தில் மூன்று ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் அக்சர் படேல் இருவரும் சேர்ந்து இந்திய அணியை காப்பாற்றினார்கள். அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள், சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள், இறுதி கட்டத்தில் சிவம் துபே 16 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அன்றிச் நோர்க்கியா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் 31 பந்தில் 39 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதற்குப் பிறகு வந்த ஹென்றி கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 17 வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஹென்றி கிளாசன் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். இங்கிருந்து ஆட்டம் மாற ஆரம்பித்தது. கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐந்து விக்கெட் கைவசம் இருக்க, 24 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இதைத் தொடர்ந்து புமரா மார்க்கோ யான்சனை வெளியேற்ற, 19ஆவது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் நான்கு ரன்கள் மட்டுமே கொடுக்க, ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லரை சூர்யா குமார் யாதவ் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதை எடுத்து இந்திய அணி அந்த ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே தந்து ஏழு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இதையும் படிங்க : 176 ரன்.. கோலி-அக்சர் மாஸ் பேட்டிங்.. டி20 உலக கோப்பை பைனல் வரலாற்றில் இந்தியா சாதனை.. கோப்பையை கைப்பற்றுமா?

இந்திய அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியிருந்தது. இதற்கு அடுத்து 13 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -