இன்றைய டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் பார்படாஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் அரையிறுதியில் விளையாடிய அணியே களம் இறக்கப்பட்டது. இந்திய அணிக்கு அதிரடியாக துவக்கம் கிடைத்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா 5 பந்தில் 9 ரன், ரிஷப் பண்ட் ரன் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து வெளியேறி இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்கள்.
இதற்கு அடுத்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவும் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். இந்த நிலையில் உள்ளே வந்த அக்சர் படேல் உடன் விராட் கோலி சேர்ந்து அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 54 பந்தில் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அக்சர் படேல் தேவையில்லாமல் 31 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடியை வெளிப்படுத்திய விராட் கோலி முதல்முறையாக இந்த தொடரில் அரைசதம் அடித்து 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். ஒரு வழியாக இந்திய அணியை மீட்டு இந்த ஜோடி கொண்டு வந்தது.
இதற்கு அடுத்து சிவம் துபே 16 பந்தில்27 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 2 பந்தில் 2 ரன், ஹர்திக் பாண்டியா 2 பந்தில் 5* ரன் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்றிச் நோக்கியா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : தெ.ஆ ஓகே.. ஆனா நாங்க சாதாரணம் கிடையாது.. இன்னைக்கு நான் எதிர்பார்க்கிறது இதுதான் – ரோகித் சர்மா பேட்டி
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பாக துபாய் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.






