நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாததற்கு வயது ஒரு காரணம் அல்ல என்று இந்திய முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பேட்டருமான அபினவ் முகுந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்வாளர்கள் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்தனர். இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகிய ஃபாஸ்ட் பௌலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஆகாஷ் தீப் சிவப்பு பந்து போட்டிகளில் மிகச்சிறந்த பௌலர் என்பதால் அவரது தேர்வு மிகச் சரியானது என்றும், அன்சுல் கம்போஜ் தனது பௌலிங் ஸ்பீடை கணிசமாக உயர்த்தியுள்ளார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறாத முகமது ஷமி குறித்து அபினவ் முகுந்த் பேசும்போது “இந்திய அணி தங்களிடம் உள்ள ஃபாஸ்ட் பௌலர்களின் குழுவை வைத்து பணியாற்றி வருகிறது. முகமது ஷமி தேர்வாகாததற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். வயது தான் அளவுகோல் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை வயது தான் காரணமென்றால், புவனேஷ்வர் குமார் டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்க மாட்டார். இந்த அணியில் ஷமியை தேர்வு செய்யாததற்கு சிஓஇ மற்றும் இந்திய அணி தேர்வாளர்களிடம் ஏதோ ஒரு உறுதியான காரணம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிற பௌலர்கள் பற்றி பேசும்போது “ஆகாஷ் தீப் மீண்டும் தேர்வாகி இருப்பது நல்ல விஷயம். காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர் ஒரு சிறந்த ரெட் பால் பௌலர். அன்சுல் கம்போஜ் சில சிறந்த தருணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் தான் அவர் ஒருநாள் போட்டியிலும் தேர்வாகியுள்ளார் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்டில் பார்த்ததை விட தற்போது சற்று அதிவேகமாக பௌலிங் செய்கிறார். இது அவருக்கு முழுமையான முதல் தொடராக இருக்கலாம். அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை, ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது சரியான தேர்வாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






