இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது!
இந்த போட்டியில் முதலில் டாசில் வென்று பந்து வீசிய இந்திய அணி, பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியை 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
மிட்சல் மார்ஸ் 4, டேவிட் வார்னர் 52, ஸ்மித் 42, லபுசேன் 39, கேமரூன் கிரீன் 31, ஜோஸ் இங்கிலீஷ் 45, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 29, மேத்யூ ஷாட் 2, பேட் கம்மின்ஸ் 21*, சீன் அப்பாட் 2, ஆடம் ஜாம்பா 2 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணித் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்ட வலதுகை வேகப் பந்துவீச்சாளர் முகமது சமி 10 ஓவர்களுக்கு, 51 ரன்கள் தந்து, ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் 74, ருதுராஜ் 71 ரன்கள் என மிகச் சிறப்பான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி 142 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 3, இஷான் கிஷான் 18 என வெளியேற, இந்திய அணிக்கு திடீரென்று ஒரு சிறிய சிக்கலான நிலைமை உருவானது. இந்த நிலையில் கேப்டன் கேஎல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூரியக்குமார் யாதவ் மிக சிறப்பாக, வழக்கத்திற்கு மாறாக விளையாடி அணியைக் காப்பாற்றினார்.
சூரியக்குமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றி எளிதான நேரத்தில், அவர் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற கேப்டன் கேஎல்.ராகுல் 63 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் ஆறு பந்துகளில் 3 ரன்கள் உடன் களத்தில் நின்றார். இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 57 ரன்களுக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது. வாய்ப்பு தரப்பட்டதில் இதுவரை சிறப்பாக செயல்படாத உலகக்கோப்பை இந்திய அணி வீரரான சூரிய குமார் யாதவ் இந்த முறை அரைசதம் அடித்து நிரூபித்திருக்கிறார். இது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான விஷயமாக அமைந்திருக்கிறது!
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. மேலும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மூன்று வடிவத்திலும் இந்திய அணி முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.
பஞ்சாப் மொகாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆறு முறைகளில் இது இரண்டாவது வெற்றியாகும். மேலும் கடைசி வெற்றி இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு வந்தது குறிப்பிடத்தக்கது!