தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய அணி மோசமாக விளையாடி வரும் நிலையில், அணி நிர்வாகத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டோடா கணேஷ், கடுமையாக விமர்சித்துள்ளார். கவுகாத்தியில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பரிதாப நிலையில் சிக்கியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. காயமடைந்த சுப்மன் கில் மற்றும் இடது கை ஆல் ரவுண்டர் அக்ஸர் பட்டேல் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.
முதல் டெஸ்டில் நம்பர் 3-இல் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தரை, இப்போட்டியில் அணி நிர்வாகம் நம்பர் 8 வரை தள்ளிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரை அவருக்கு முன்னால் அனுப்பியது புரியாத முடிவாக அமைந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டோடா கணேஷ் “கடந்த டெஸ்டில் நம்பர் 3-இல் இரண்டு தரமான இன்னிங்ஸ்கள் ஆடிய வாஷிங்டன் சுந்தரை, அடுத்த டெஸ்டிலேயே நம்பர் 8-க்கு தள்ளிவிட்டார்கள். இப்படி குழப்பமான இந்திய டெஸ்ட் அணியை இதுவரை பார்த்ததே இல்லை.
சாய் சுதர்ஷன் நம்பர் 3-இல் 40 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரும் சொற்ப ரன்களில் சரிந்தது. 119-6 என்ற நிலையில் தான் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். நடுவரிசை வீரர்கள் அனைவரும் மோசமான வகையில் விளையாடினார்கள்.
இதையும் படிங்க: இந்திய அணி பேட்டிங்கில் திணறல்.. பாலோ ஆனை தவிர்க்க, இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுக்கனும்.. விவரம்
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்றே இந்தியா மறுபடியும் பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும். என் கண்களை நம்ப முடியவில்லை.” தற்போது இந்திய அணி மதிய உணவு நேர இடைவேலையின் போது 174-7 என்ற நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஃபாலோ-ஆன் தவிர்க்க இன்னும் 116 ரன்கள் தேவை. இதனால் சொந்த மண்ணில் ஒரு அதிர்ச்சித் தோல்வியை நாம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.