இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி கடைசி வரை போராடி 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சூழலில் இந்திய அணியில் மிகப்பெரிய ஓட்டை இருப்பதாகவும் அதனை கம்பீர் சரி செய்ய வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், கருண் நாயர் தற்போது மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டார்.
கம்பீருக்கு கோரிக்கை:
மூன்றாவது வீரர் என்ற இடத்திற்கு அவர்தான் சரியான நபரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி அவருக்கு வாய்ப்பு வழங்குமா? இல்லை சாய் சுதர்சன் போன்ற இடது கை பேட்ஸ்மேனை அணிக்குள் கொண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து அணியால் பந்து வீச முடியவில்லை. பந்த் இந்த தொடரில் இரண்டு சதம் அடித்து விட்டார். ஜடேஜா நான்கு அரை சதம் அடித்துவிட்டார். இதன் காரணமாக இந்திய அணி சாய் சுதர்சனை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
கருண் நாயருக்கு நெருக்கடி:
கருண் நாயர் தற்போது ஆறு இன்னிங்ஸில் விளையாடி வெறும் 131 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை. ஆனால் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்சில் 48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையும் பாருங்க: 3வது டெஸ்ட் தோல்வி.. இந்திய அணி எவ்வளவு காலம் அவரை ஆதரிக்கும்னு தெரியல.. நல்லா மாட்டிக்கிட்டாரு.. சஞ்சய் மஞ்சுரேக்கர்
இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியும் கருண் நாயர் குறித்து இந்திய அணி யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த இடத்திற்கு பதில் சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜூரலை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்திய அணியில் பேட்டிங்கில் 3வது இடத்தில் பிரச்சனை இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.






