135-1.. பாஸ்பால் ஆடிய ரோகித்-ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்.. முதல் நாளே சம்பவம் செய்த இந்திய அணி

0
332
Jaiswal

மார்ச்-7. இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது தரம்சாலா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை ஏற்கனவே இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்து சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் கிரவுலி 79 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 5 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். முதலில் ரோஹித் சர்மா வேகப்பந்து வீச்சில் தாக்கி விளையாட, அடுத்து சுழற் பந்துவீச்சு வந்ததும் ஜெய்ஸ்வால் தனது அதிரடியை ஆரம்பித்தார்.

இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் சோயப் பஷீரின் ஒரே ஓவரின் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், மீண்டும் அவரது ஓவரிலேயே தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து, இந்தத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார்.

இதற்கு அடுத்து உடனே அவரது பந்துவீச்சிலேயே 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 பந்துகளில் அதிரடியாக 104 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரோஹித் சர்மா 52, சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்க, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : பிராட்மேனுக்கு அடுத்து ஜெய்ஸ்வால் பிரம்மாண்ட சாதனை.. மேலும் பல ரெகார்டுகள்.. முழு விபரம்

தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 83 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருக்கிறது. நாளை ஒரு நாள் இந்திய அணி முழுமையாக விளையாடினாலே இங்கிலாந்து அணியை விட 200 ரன்கள் முன்னிலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது.