செஞ்சூரியன் டெஸ்ட்டில் அபார வெற்றி ; எந்த ஒரு கேப்டனாலும் செய்ய முடியாததை சுலபமாக நிகழ்த்திக் காட்டி வரலாற்று சாதனை படைத்துள்ள விராட் கோஹ்லி

0
1199
Captain Virat Kohli

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியால் அதனுடைய முதல் இன்னிங்ஸ் முடிவில் 192 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

130 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கிய இந்திய அணி 124 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக அமைத்தது.ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி 194 ரன்களிலேயே ஆட்டமிழக்க, இந்திய அணி இறுதியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தற்பொழுது அபார வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, “எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த வரலாற்று வெற்றிக்கான அத்தனை பெருமையும் அவர்களையே சென்றடையும் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்”.

கேப்டன் விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனைகள்

பாக்ஸிங் டே ( டிசம்பர் 26 தொடங்கி டிசம்பர் 30 வரை நடைபெறும் ) டெஸ்ட் போட்டியில் இதுவரை எந்த ஒரு இந்திய கேப்டனும் இரண்டு முறை வெற்றி பெற்றதில்லை. தற்போது முதல் முறையாக விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் தனது அணியை வெற்றி பெறச் செய்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இதுவரை விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி தலா ஒரு முறை வெற்றி பெற்றிருந்தது. இன்று விராட் கோலி தலைமையில் மற்றொரு வெற்றியை இந்திய அணி பெற்றதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் விராட் கோலி இன்று தட்டிச்சென்றுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி செஞ்சூரியன் மைதானத்தில் எந்த ஒரு ஆசியாவைச் சேர்ந்த கேப்டனும் வெற்றி பெற்றதில்லை. அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் மற்றும் தோணி போன்ற வீரர்கள் கேப்டனாக இருந்து செய்ய முடியாத அந்த சாதனையை இன்று விராட் கோலி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அந்த சாதனையையும் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துள்ளார்.

அதேபோல ஆசியாவை கடந்து அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டனாகவும் ( 11 வெற்றிகள் ), செனா ( சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ) நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றியை பெற்ற ஆசிய கேப்டனாகவும் ( 7 வெற்றிகள் ) விராட் கோலி அடுக்கடுக்கான சாதனையை இன்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற பெண்கள் மத்தியில் விராட் கோலி 40 வெற்றியுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 41 வெற்றிகள் பெற்று ஸ்டீவ் வாக் 3வது இடத்திலும், 48 வெற்றிகள் பெற்று ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும், 53 வெற்றிகள் பெற்று கிரீம் ஸ்மித் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டனாக விராட் கோலி தற்பொழுது தன்னை நிலைநாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி படைத்துள்ள புதிய சாதனை விவரங்கள்

1990 முதல் 2017ஆம் ஆண்டு வரை 8 முறை மட்டுமே செனா ( சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ) நாடுகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்பொழுது 2018 முதல் 2021 வரையில், வெறும் 3 ஆண்டுகளிலேயே ஒன்பது முறை வெற்றி பெற்று இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அதேபோல செனா நாடுகளில் 2018 ஆம் ஆண்டு இந்திய அணி 4 வெற்றிகள் பெற்று இருந்தது. தற்போது அதே போல இந்த ஆண்டிலும் 4 வெற்றிகளை இந்திய அணி ருசிபார்த்துள்ளது.

கிரிக்கெட் மைதானங்களை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவில் உள்ள காபா, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மற்றும் ஓவல், அதேபோல தென்னாபிரிக்காவில் உள்ள செஞ்சூரியன் மைதானங்கள் மிக பாரம்பரியமான, முக்கிய மைதானங்களாக பார்க்கப்படும். இந்த அனைத்து மைதானங்களிலும் இந்த ஆண்டு இந்திய அணி வெற்றி பெற்று, தனக்கென தனி முத்திரையை இன்று பதித்துள்ளது. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் தற்பொழுது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.