ராஞ்சியில் இங்கிலாந்துக்கு சம்பவம்.. 53 ஓவரில் போட்டியை மாற்றிய இந்தியா.. 3ம் நாள் கலக்கலாக முடிவு

0
469
Jurel

தற்பொழுது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

- Advertisement -

மூன்றாவது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாட, நான்காவது இன்னிங்ஸை இந்தியா விளையாட வேண்டும் என்பதால், ஆடுகளம் கடைசியில் மிகவும் சேதம் அடைந்து இந்தியா இலக்கை துரத்த முடியாமல் தோல்வியடையும் என்று பலரும் கணித்தார்கள்.

இப்படியான நிலையில் நம்பிக்கை விடாத இந்திய அணி இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை பந்துவீச்சில் எதிர்கொண்டது. இங்கிலாந்து இருக்கும் முன்னிலையை வைத்து அதிரடியான துவக்கத்தைப் பெற திட்டமிட்டு உள்ளே வந்தது. அதிரடியாக விளையாடவும் செய்தது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், கடைசியில் வந்து கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியை 145 ரன்களுக்கு சுருட்டினார். மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பெற்ற முன்னிலையோடு சேர்த்து இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளத்தில் பந்து திடீரென உருண்டு வருகின்ற காரணத்தினால், இந்த இலக்கும் கடினமாகவே பார்க்கப்பட்டது.

மேலும் மிகவும் நெருக்கடியான போட்டியின் கடைசி அரை மணி நேரத்தை இந்திய அணி விளையாட வேண்டி இருந்ததால், இந்த போட்டியில் மிக முக்கியமான நேரமாக அது பார்க்கப்பட்டது.

இந்த முறை பென் ஸ்டோக்ஸ் முதல் ஓவரை ஜோ ரூட் கையில் தந்தார். இதன் காரணமாக இந்த முறை ஜெய்ஸ்வாலை ஓபன் செய்யவிடாமல், ரோகித் சர்மா ஓபன் செய்தார். மேலும் பவுண்டரி அடிக்க கிடைத்த பந்துகளை தைரியமாக அடித்தார்.

இன்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் எதையும் இழக்காமல் எட்டு ஓவர்களில் 40 ரன்கள் எடுத்திருக்கிறது. ரோகித் சர்மா 24 மற்றும் ஜெய்ஸ்வால் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இன்னும் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு நாட்களில் 152 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கிறது.

இதையும் படிங்க : வெறும் 35 ரன்னுக்கு 7 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய அஸ்வின் குல்தீப்.. வெற்றி முகத்தில் இந்திய அணி

இன்று இந்தியா விளையாடி முடிக்கும் வரையில் போட்டி இங்கிலாந்தின் கைவசம்தான் இருந்தது. ஆனால் இந்திய அணி அடுத்து 53 ஓவர்கள் இங்கிலாந்துக்கு பந்துவீசி, மொத்தமாக போட்டியை தன் வசம் கொண்டு வந்து விட்டது. ராஞ்சியில் வைத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்பில் தற்பொழுது இருக்கிறது.