2023 ஓடிஐ உலக கோப்பையில் முதல்முறையாக களமிறங்கும் முக்கியமான 5 வீரர்கள்!

0
3740
Odiwc2023

இந்த ஆண்டு இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் முழுமையாக இந்தியாவிலே முதல்முறையாக நடைபெறுகிறது.

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர வீரர்களை தாண்டி முதல்முறையாக 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் கவனிக்கத்தக்க முக்கியமான ஐந்து வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்!

- Advertisement -

முகமது சிராஜ்;

தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர். சில ஆண்டுகளாக இவர் பந்து வீசும் லைன் மற்றும் லென்த்தில் மிகச் சிறப்பாக வேலை செய்து அற்புதமாக மாற்றி இருக்கிறார். இவரது வாபுல் ஸீம் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய கடினத்தை உருவாக்குகிறது. இந்திய அணியில் பும்ரா இருப்பாரா இல்லையா என்கின்ற குழப்பத்திற்கு இடையில், இவர் இந்திய பந்துவீச்சு படையில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

கேமரூன் கிரீன் :

- Advertisement -

கிரிக்கெட் உலகில் எப்பொழுதும் வேகப்பந்து வைத்து ஆல்ரவுண்டர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு இருக்கும். ஏனென்றால் இந்த வகையில் ஒரு ஆல்ரவுண்டர் உருவாவது மிகவும் கடினமான ஒரு விஷயம். அணிக்கு மிக அதிகபட்ச உழைப்பை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இதனால் காயமடையவும் அடிக்கடி வாய்ப்பு உண்டு. இந்த ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரை பொறுத்தவரையில் பந்துவீச்சில் கேப்டன் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த விதத்தில் தொடர்ந்து வீச முடியும். மேலும் பேட்டிங்கில் எந்த வரிசையில் வேண்டுமானாலும் வந்து விளையாட முடியும். கடைசியாக இந்தியாவிற்கு வார்னர் இடத்தில் வந்து விளையாடிய டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ரவுப் :

மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் வீசக்கூடிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர். ஆட்டத்தின் எல்லா பகுதிகளும் பந்தை கையில் கொடுத்தால் வீசக்கூடியவர். மேலும் ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்தில் இருக்கும் வேகம் இறுதிவரை இருக்கும்படி வீசக்கூடிய திறமை கொண்டவர். இவர் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி உடன் இணையும் பொழுது பாகிஸ்தான் பந்துவீச்சு படையின் வலிமை மிக அதிகமாக மாறும். எனவே முதல்முறையாக இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இவரும் முக்கிய வீரராக இடம் பெறுகிறார்.

டிராவிஸ் ஹெட் :

இந்த இடதுகை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கடைசியாக இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரில் வார்னர் இடத்தில் களம் இறங்கி மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடியிருந்தார். உலகக் கோப்பையில் வார்னர் விளையாடினாலும், இவருக்கு மிடில் வரிசையில் கட்டாயம் இடம் அளிக்கப்படும் என்பது உறுதி. தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் வரை நல்ல பேட்டிங் ஃபார்மை தொடர்ந்து வருவதால் இவர் இந்த உலகக் கோப்பையில் முக்கியமான வீரராக கவனிக்கப்படுகிறார்.

சுப்மன் கில் :

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலியாக பார்க்கப்படும் இந்த இளம் இந்திய பேட்ஸ்மேன் மீதுதான் பலரது கவனம் இந்த உலகக் கோப்பையில் இருக்கிறது. இந்த வருடத்தில் இந்திய மண்ணில் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டி20 சர்வதேச சதம், ஐபிஎல் தொடரில் மூன்று சதம் என தன்னுடைய பேட்டிங் பொற்காலத்தில் இவர் இருக்கிறார். எனவே இவர் மீது இந்த உலகக் கோப்பையில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவுகிறது!