“மூன்றே வாரம்.. இங்கிலாந்து பத்திரிகைகள் இந்திய ஆடுகளம் பற்றி புலம்பலை ஆரம்பிக்கும்!” – கவாஸ்கர் விமர்சனம்!

0
105
Gavaskar

ஆசிய கண்டத்து கிரிக்கெட் வீரர்களை பற்றிய மதிப்பீடு, அவர்கள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என நான்கு நாடுகளில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு பேட்டிக்கு மற்றும் பந்துவீச்சுக்கு தரமான ஆடுகளங்கள் உருவாக்கப்படுவதாகவும், இங்கு திறமை இருப்பவர்களால் மட்டுமே வெல்ல முடியும் என்பதாகவும், ஒரு மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த சூழ்நிலைகளுக்கு ஆசிய வீரர்கள் பழகாதது மட்டும்தான்இதற்குள் இருக்கும் உண்மை காரணம்.

- Advertisement -

மேலும் ஆசிய ஆடுகளங்கள் விளையாட முடியாத சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான படுகுழி ஆடுகளங்கள் என்று இந்த நான்கு நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் விமர்சிக்கப்படும். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்களால் பெரிதும் விமர்சிக்கப்படும்.

இப்படியான நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா ஒரு மோசமான ஆடுகளத்தில் விளையாடி வென்று வந்தது. அந்த சமயத்தில் இது இந்தியாவில் நடந்திருந்தால் என்ன மாதிரியான விமர்சனங்கள் கிளம்பி இருக்கும் என்று, இந்திய தரப்பில் இருந்து தங்களது ஆதங்கத்தை கேப்டன் ரோஹித் சர்மா முதல் முன்னாள் வீரர்கள் வரை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மாதிரியான நாடுகளில் ஆடுகளம் மோசமாக அமைந்தால் ஆடுகள தயாரிப்பாளர் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என்பதாகவும், இது இந்தியாவில் இப்படியான வறண்ட ஆடுகளங்கள் அமைக்கப்பட்டால், இந்திய ஆடுகள தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே செய்ததாகவும் பேசுவார்கள்.

- Advertisement -

சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து ஆஸ்திரேலியா விளையாடிய பொழுது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இவர்களுடைய நாட்டில் ஆடுகளங்களில் ஏதாவது தவறு நடந்தால் அதை மனிதர்களின் பிழை என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் நடந்தால் நாங்கள் மோசடிக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்கின்ற அளவில் பேசுகிறார்கள். இது போன்ற கீழ்த்தரமான தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள்.

இன்னும் சுமார் மூன்று வாரங்களில் இந்தியாவில் இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதிக் கொள்ளும் மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இது விளையாட்டில் நிறைய புலம்பலை வைத்திருக்கும் வீரர்களையும் ஊடகங்களையும் கொண்டுள்ள நாட்டிற்கு எதிராக நடக்க இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு பொருந்தாத எல்லா விஷயத்தையும் அவர்கள் விமர்சிப்பார்கள். மேலும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் கடுமையாகவும் மிக வேகமாகவும் பரவும்!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்!