“அடிச்சு சொல்றேன்.. அடுத்த முகமது சமி இவர்தான்!” – ரவிச்சந்திரன் அஷ்வின் உறுதியான கணிப்பு!

0
20929
Shami

இன்றைய கிரிக்கெட் உலகில் கணிக்க முடியாத மிகவும் ஆபத்தான வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியின் முகமது சமி இருந்து வருகிறார்.

காரணம் அவர் பந்தை வீசும் பொழுது தையல் செங்குத்தாக அவ்வளவு நேராக இருக்கும். மேலும் அவர் கையில் இருந்து கிளம்பும் பந்து பேக் ஸ்பின் எனப்படும் பின்சுழற்சி அதிகமாக இருக்கும்.

- Advertisement -

மேலும் பந்தை ரிலீஸ் செய்யும் நேரத்தில் மணிக்கட்டு மிகத் துரிதமான பலத்தை உருவாக்கி பந்தை வேகமாக அனுப்பும். இப்படி செல்லும் பந்து ஆடுகளத்தில் படும்பொழுது, அதன் போக்கிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும்.

எனவே இதன் காரணமாக முகமது சமியை விளையாடுவதை பேட்ஸ்மேன்கள் வெறுக்கிறார்கள். குறிப்பாக அவரை சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் கடினம்.

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் தன்னுடைய பந்துவீச்சின் வீரியம் எப்படிப்பட்டது என்று காட்டி இருந்தார். ஏழு போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவராக இந்த உலகக் கோப்பையில் இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணிக்கு அடுத்த முகமது சமி யார் என்று சுவாரசியமான கருத்தை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “முகமது சிராஜ் ஜூனியர் சமியாக வருவார் என்று நான் முன்பு நினைத்தேன். ஆனால் அது இப்போது முகேஷ் குமாராக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சமியை நான் திரைப்பட நடிகர் மோகன்லால் வைத்து லாலேட்டன் என்று அழைப்பேன். தற்பொழுது முகேஷ் குமார் ஜூனியர் லாலேட்டன்.

சமியைப் போலவே முகேஷ் குமாருக்கு ஒத்த அமைப்பு மற்றும் அதே உயரம், மணிக்கட்டு வலிமை மற்றும் பந்தில் பயங்கர பேக் ஸ்பின்னை வைத்திருக்கிறார். மேலும் பந்தில் மிகச் சரியான சீர் அமைப்பைக் கொண்டிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவர் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்!” என்று கூறியிருக்கிறார்!