“ஐபிஎல் விளையாட போறேன்.. வெஸ்ட் இண்டிஸ் பற்றி கவலையில்லை என்பது யார் தவறு?” – லாரா வேதனை

0
158
Lara

1970கள் ஆரம்பித்து 1980 களின் மத்தியில் வரை வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் உலக கிரிக்கெட்டை ஆட்சி செய்தது.

அந்த அணியில் இருந்து மிகப்பெரிய லெஜன்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் வந்தார்கள். அந்தத் தொகுப்பின் இறுதி வீரராக வந்தவர் ப்ரைன் லாரா.

- Advertisement -

அவருடைய காலத்திற்குப் பிறகு மிக வேகமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேய்ந்து, தற்பொழுது கடைசியாக நடந்து முடிந்த டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை என இரண்டு உலகக் கோப்பை தொடர்களுக்கும் தகுதிப் பெற முடியாமல் போனது.

நீண்ட வடிவ கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது கூட புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் மிக வலிமையாக இருந்து திரும்ப வந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை நடுவில் வென்றார்கள். இறுதியாக அந்த வடிவத்திலும் அவர்கள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாதது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

மேலும் வெஸ்ட் இண்டிஸ் இளைஞர்கள் கிரிக்கெட்டுக்கு பெரிதான ஆர்வம் காட்டுவதில்லை. கிரிக்கெட்டுக்குள் வரும் வெஸ்ட் இண்டிஸ் வீரர்களும் சில காலத்தில் ஐபிஎல் மாதிரியான பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளுக்கு முன்னுரிமை தந்து விடுகிறார்கள். இது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வெகுவாக பாதிக்கிறது. தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள பிரைன் லாரா கூறும்பொழுது “அதாவது நாம் உண்மைகளை எதிர்கொண்டாக வேண்டும். உலகம் முழுவதும் தற்பொழுது விளையாடப்பட்டு வரும் பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் லாபத்தோடு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டால் போட்டியிட முடியாது.

நாம் முதலில் 18, 19 வயது இளம் வீரர்களை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். நம் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு செல்கிறேன் என்றோ இல்லை வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரமாட்டேன் என்பது அவர்களது தவறு மட்டும் அல்ல. கரீபியன் மக்களாகிய நம்முடைய தவறும் அதில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய இளம் திறமைகள் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். இங்கு திறமைகள் எப்பொழுதும் நிறைய இருக்கவே செய்கின்றன. ஆனால் சர்வதேச கிரிக்கெட் என்பது ஒரு மிகப்பெரிய மேடை. அது மிக்கி மவுஸ் கிடையாது.

தற்பொழுது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்கிறோம். அவர்கள் எதையும் நமக்கு விட்டுத் தரப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே தங்களுடைய கோடைகாலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறார்கள். தற்பொழுது அதை ஐந்தாக மாற்ற நம்முடன் முயற்சி செய்வார்கள்.

கடந்த 13 மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய பெர்த் மைதானத்தில் நாம் மிகச் சிறப்பாக போராடி ஐந்தாவது நாளில்தான் தோல்வி அடைந்தோம். இந்த முறையும் நான் அப்படி ஒரு சிறந்த போராட்டத்தை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.