“நான் 40 பந்தில் முதல் ரன் எடுப்பேன்.. இவர் செஞ்சரி அடிக்கிறார்..!” – மேக்ஸ்வெல் குறித்து சுனில் கவாஸ்கர் சுவாரசியமான பாராட்டு!

0
467
Gavaskar

நேற்று டெல்லி மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற உலகச் சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்!

நேற்றைய போட்டியில் வார்னர், ஸ்மித் மற்றும் லபுசேன் மூவரும் ஏற்படுத்தி வைத்திருந்த வலிமையான அடித்தளத்தை, 40 ஓவர்கள் தாண்டி வந்த மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக பயன்படுத்தினார்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போதும் இதே போல் நல்ல அடித்தளத்தை துவக்க ஆட்டக்காரர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அப்பொழுது பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே அனுப்பப்பட்ட மேக்ஸ்வெல், சந்தித்த முதல் பந்தையே அடிப்பதற்கு சென்று ஆட்டம் இழந்தார்.

ஆனால் இந்த முறை அவர் அப்படியான தவறான அணுகுமுறையை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ஆரம்பத்தில் சிறிது பொறுமை காட்டி பின்பு தன்னுடைய வழக்கமான பாணியில் பந்துகளை பல திசைகளில் பறக்க விட்டார்.

- Advertisement -

இதுகுறித்து கூறியுள்ள சுனில் கவாஸ்கர் “அவர் அடித்த ரிவர்ஸ் ஹிட் கிரிக்கெட் ஷாட்களில் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் பந்து சிக்ஸருக்கு போய்விட்டது. ஆனால் அதற்கு 12 ரன்கள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அதற்குப் பிறகு நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு தடுமாறியது. அவர்களுக்கு மேற்கொண்டு பந்தை எங்கே வீசுவது என்று புரியவில்லை.

அவர் ரன்களை கொண்டு வருவதற்கு விளையாடிய விதம் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருந்தது. நான் 40 பந்துகளில்தான் முதல் ரன் எடுத்து ஆட ஆரம்பிப்பேன். மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து முடித்து விட்டார். இது அற்புதமானது!” என்று கூறியிருக்கிறார்!

மேக்ஸ்வெல் குறித்து ஷேன் வாட்சன் கூறும்பொழுது “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் இன்று ஆட்டத்தை துவங்கிய விதம் மிகச் சரியாக இருந்தது. முதல் பந்திலேயே அடிக்கப் போய் ஆட்டம் இழந்ததிலிருந்து அவர் கற்றுக்கொண்டு இருக்கிறார்.

அவர் முதல் பந்தில் இருந்து கட்டுப்பாட்டில் இருந்தார். பின்பு அவருக்கு எல்லாம் சரியான உடன், நான் பலமுறை பார்த்திருக்கும் வழக்கமான மேக்ஸ்வெல் வெளியே வந்தார். இது ஒரு முழுமையான அதிரடியான ஆட்டம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -