இங்கிலாந்து கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு 2019 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது!
பொதுவாக இங்கிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் மரபு என்று தனிப்பட்ட கௌரவம் உண்டு. அவர்கள் எப்பொழுதும் அதிரடியான கிரிக்கெட் முறைக்கு செல்ல மாட்டார்கள். பாரம்பரிய முறையில் விளையாடுவதுதான் அவர்களுடைய பழக்கம்.
இதுவே இங்கிலாந்து கிரிக்கெட்டில் தங்களை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மற்ற அணிகள் குறிப்பாக ஆஸ்திரேலிய காலத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொண்டது.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி இங்கிலாந்து கிரிக்கெட் முற்றிலும் மாற்றியமைத்தது. தனிக்குழு ஏற்படுத்தப்பட்டு, இங்கிலாந்து கிரிக்கெட்டின் அணுகுமுறை அதிரடியாக மாற்றப்பட்டது.
இதற்கு பலனாக அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தற்பொழுது இங்கிலாந்து அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவத்திலும் அசுர பலத்தோடு இருந்து வருகிறது.
உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி குறித்து பேசி உள்ள இயான் மோர்கன் கூறும்பொழுது ” கேப்டன் பட்லரும் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட்டும் திரைக்குப் பின்னால் அமைதியாக இந்த உலகக் கோப்பைக்கு சிறப்பாகத் திட்டங்களை தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இது குறித்து கேட்டால், நம்ப முடியாத அளவிற்கு சவால் ஆனது என்றுதான் சொல்வார்கள்.
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால் 2019 ஆம் ஆண்டு நாங்கள் உலகக் கோப்பையை வென்றதை விட, தற்போது உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வது பெரிய சாதனையாகவே இருக்கும்.
ஏனென்றால் இங்கிலாந்து விரும்பும் படியான போட்டி அட்டவணையோ அல்லது கலவையோ முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து விலகி இந்தியாவில் வந்து விளையாடுகிறார்கள்.
இந்தியாவில் வெற்றி பெறுவது இங்கிலாந்தில் வெற்றி பெறுவதை விட சிறப்பானது. அதே சமயத்தில் சவாலானது. ஆனால் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேப்டன் பட்லருக்கு என்னுடைய மிகப்பெரிய பாராட்டுக்கள் எதற்கு என்றால், அவர் தன்னுடைய சொந்த வழியில் விஷயங்களை செய்கிறார். நான் என்ன செய்தேன் என்று பார்த்து அதை பிரதிபலிக்க அவர் முயற்சி செய்யவில்லை!” என்று கூறி இருக்கிறார்!