இந்தியா இந்த வாட்டி ஜெயிக்கலனா.. அடுத்த 3 உலகக் கோப்பை வாய்ப்பே இல்லை.. ரவி சாஸ்திரி சொன்ன முக்கியமான காரணம்.!

0
7831

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாக் அவுட் ஸ்டேஜை நெருங்கி இருக்கிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வருகின்ற புதன் மற்றும் வியாழக்கிழமை இரண்டு அரை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விளையாடி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு எல்லா போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரண்டு துறைகளுமே சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. பேட்டிங் பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது .

- Advertisement -

இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பான ஃபார்மில் இருக்கின்றனர். மேலும் தொடர் வெற்றிகளும் அவர்களது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் இந்தியா வருகின்ற 15ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை மும்பையில் வைத்து எதிர்கொள்ள இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இதுதான் இந்திய அணிக்கு உலக கோப்பையை கைப்பற்ற மிகப்பெரிய வாய்ப்பு என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியா இந்த முறையும் உலகக்கோப்பையை கைப்பற்ற தவறினால் இன்னும் மூன்று அல்லது நான்கு உலகக்கோப்பைகள் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசிய ரவி சாஸ்திரி ” இந்த தேசமே ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறது. கடைசியாக இந்தியா 12 வருடங்களுக்கு முன்பு உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது அவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முறை நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். இல்லையென்றால் இன்னும் மூன்று அல்லது நான்கு உலகக்கோப்பை போட்டிகளுக்கு காத்திருக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் இந்திய அணியின் 7-8 வீரர்கள் தங்கள் கேரியரின் உச்சத்தில் இருக்கின்றனர். அடுத்து வரும் உலக கோப்பைகளில் இவர்களில் சில பேர் ஓய்வு பெற்று இருக்கலாம்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த உலகக்கோப்பை அந்த வீரர்களின் கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். அதனால் அவர்கள் கடின முயற்சி செய்து இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்ல வேண்டும். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கிறது. மிகவும் அற்புதமான ஒரு ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு இரவில் நடைபெற்ற மாற்றமல்ல. தொடர்ந்து நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் சமீ மற்றும் பும்ரா இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர். சிராஜ் இவர்களுடன் மூன்று ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அவர்கள் ஒரு கூட்டணியாக பந்துவீச்சில் தாக்குதலை மேற்கொள்கின்றனர். சரியான அளவில் மற்றும் லைனில் தொடர்ச்சியாக பந்து வீசுவதை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் கவனம் வேறு எதிலும் சிதறுவதில்லை. இது அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கிறார். இந்தியா இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பெங்களூரில் விளையாட இருக்கிறது