தற்பொழுது நவீன கால கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சு என்பது மிகவும் சுருங்கி வரையறுக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது.
குறிப்பாக சுழற் பந்துவீச்சில் ஆப்-ஸ்பின் வகைமை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களால் மட்டுமே வீசப்படும் பந்துவீச்சாக மாறியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ஆப் ஸ்பின் பந்துவீச்சுக்கு தற்பொழுது தேவை இருக்கிறது.
நவீன கிரிக்கெட்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். குறிப்பாக ரஷீத் கான் போன்ற மிஸ்டரி ஸ்பின்னர்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.
இப்படியான நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆப் ஸ்பின்னர் என்ற வகையில் தற்போது வரை வெள்ளைப் பந்து அணியிலும் இடம்பெறும் சிறப்பு பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் டெஸ்ட் கிரிக்கெட்டோடு சுருக்கப்பட்டு விட்டார்.
ஏறக்குறைய இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காலத்தோடு ஆப் ஸ்பின்னரை பிரதான ஸ்பின்னர் ஆக அணியில் எடுக்கும் போக்கு நின்று விடலாம்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் விளையாடிய நட்சத்திர வீரர்களை இந்த காலத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கின்ற சுவாரசியமான கேள்விகள் பிரபலமான வீரர்களுக்கு முன் வைக்கப்பட்டன.
வக்கார் யூனுஸ்க்கு எதிராக விராட் கோலி, அணில் கும்ளேவுக்கு எதிராக பாபர் அசாம், சையித் அன்வருக்கு எதிராக பும்ரா, வாசிம் அக்ரமுக்கு எதிராக ரோஹித் சர்மா, சச்சினுக்கு எதிராக ஷாகின் அப்ரிடி என்று முன்னிறுத்தப்பட்டது.
இந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜாவேத் மியான்தத்துக்கு எதிராக பந்து வீசுவதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நிச்சயமாக நாங்கள் இருவரும் மோதினால் மியான்தத் வெற்றி பெறுவார். அவர் மிகவும் அற்புதமான வீரர். டைம் மெஷின் இருந்தால் அப்படி ஒரு மோதலை நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!