“இப்ப இருக்க ரூல்ஸ் படி விளையாடி இருந்தால் சச்சின் டபுள் மடங்கு ரன் அடிச்சிருப்பார்!” – ஜெயசூர்யா நச் கருத்து!

0
8288
Sachin

இந்தியாவில் தற்பொழுது 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்றில் இன்று கால் வைக்க இருக்கிறது. மேலும் எந்த உலகக் கோப்பைக்கும் இல்லாத அளவுக்கு நடப்பு உலகக் கோப்பை தொடர் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

இதுவரை லீக் சுற்றில் விளையாடியதில் இந்திய வீரர் விராட் கோலி அதிக ரன்கள் அடித்தவராக முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவின் எட்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச சதங்களாக சச்சின் 49 சதங்கள் அடித்து இருந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி பந்து வீசும் இரண்டு முனைகளிலும் புதிய பந்துகள் கொடுக்கப்பட்டன. மேலும் 11 முதல் 40 வரை ஓவர்களுக்கு வெளியில் நான்கு பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு 5 வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இரண்டு புதிய பந்துகள் தருவதால் பேட்டுக்கு பந்து விளையாட நன்றாக வரும். மேலும் ஒரு ஃபீல்டர் வெளியில் 30 ஓவர்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பவுண்டரிகள் மூலம் ரன் அழுத்தம் இல்லாமல் விளையாட முடியும்.

- Advertisement -

மேலும் இரண்டு புதிய பந்துகள் என்கின்ற காரணத்தினால் பந்து தேயாது. பந்து தேய்ந்தால்தான் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இதை இறுதியில் விளையாடுவது கடினமாகவும் இருக்கும். மேலும் அழுக்கடையும் பந்தை சரியாக கவனிப்பதும் கடினம்.

எனவே இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு இந்தச் சவால்கள் எதுவும் கிடையாது. இதன் காரணமாக வக்கார் யூனுஸ் முதல் 30 ஓவர்களுக்கு ஒரு பந்து, அடுத்த 20 ஓவர்களுக்கு ஒரு பந்து என்று பயன்படுத்தலாம் என்பதாக ட்விட்டரில் கேள்விகள் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள இலங்கை லெஜெண்ட் சனத் ஜெயசூர்யா கூறும் பொழுது “வக்கார் யூனுஸ் கருத்துடன் உடன்படுகிறேன் சில மாற்றங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்யப்பட வேண்டும். சச்சினுக்கு இரண்டு புதிய பந்துகளில் பேட்டிங் செய்யும் பாக்கியம் கிடைத்திருந்தால், தற்போதைய பவர் பிளே விதிகளின்படி அவர் விளையாடி இருந்தால், அவருடைய ரன்களும், சதங்களும் இரண்டு மடங்காக இருந்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!