ஐசிசி-யின் புதிய விதி.. ஸ்டாப் கிளாக் ரூல்.. நாளை இங்கிலாந்து போட்டியில் அறிமுகம்.. அப்படி என்றால் என்ன.?.. முழு விபரம்.!

0
2140

மற்ற போட்டிகளை விட கிரிக்கெட் போட்டி நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு போட்டியாகும். இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது டி10 போட்டிகளும் கிளப் மற்றும் லீக் போட்டிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் காலதாமதம் ஏற்படும் போது அதற்காக அபராதம் மற்றும் பெனால்டி விதிக்கும் முறை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 7 மணி நேரம் 45 நிமிடங்களுக்குள் முடிய வேண்டும். இதில் பீல்டிங் செய்யும் அணியால் காலதாமதம் ஏற்படும் போது அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டு இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

- Advertisement -

பீல்டிங் செய்யும் அணி குறித்த நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கவில்லை என்றால் தாமதமாக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் இறுதி ஓவர்களில் ஐந்து வீரர்களை உள் வட்டத்திற்குள் நிறுத்த வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீண்டும் ஒரு புதிய விதியை ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய விதி நாளை தொடங்க இருக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இருந்து ஆரம்பம் ஆகிறது.

இந்த புதிய விதி டிசம்பர் 2023 இல் இருந்து ஏப்ரல் 2024 வரை பரிசோதித்து பார்க்கப்படும். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து வரும் காலங்களில் முடிவு செய்யப்படும் என அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி ஜெனரல் மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறையின் படி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கும் போட்டியில் ஸ்டாப் கிளாக் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது .

இந்த புதிய விதிமுறையில் ஒவ்வொரு ஓவர் வீசப்படும் நேரத்தையும் நடுவர்கள் தங்களது ஸ்டாப் கிளாக்கில் குறித்துக் கொள்வார்கள். ஒரு ஓவர் முடிந்த நேரத்திலிருந்து 60 நொடிகளுக்குள் அடுத்து ஓவர் வீசப்பட வேண்டும். மேலும் இந்த விதிமுறை மீறப்படும் போது இரண்டு முறை நடுவர்கள் எச்சரிக்கை கொடுப்பார்கள். மூன்றாவது முறையும் இதே தவறு நடந்தால் பந்து வீசும் அணிக்கு எதிராக 5 ரன்கள் பெனால்ட்டியாக வழங்கப்படும். இதன் மூலம் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனசாக கிடைக்கும்.

- Advertisement -

ஏற்கனவே இருக்கும் 41.9 விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த புதிய விதிமுறை 41.9.4 கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புதிய விதி தொடர்பாக ஐசிசி ஜெனரல் மேனேஜர் வாசிம் கான் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் ” சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வேகப்படுத்தும் பொருட்டு இந்த ஸ்டாப் கிளாக் விதிமுறை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறையின் வெற்றியை தொடர்ந்து ஸ்டாப் கிளாக் விதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. இந்த சோதனையின் இறுதியில் கிடைக்கும் முடிவுகளை வைத்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த புதிய விதிமுறை 2018 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற எம்சிசி கிரிக்கெட் மாநாட்டில் சவுரவ் கங்குலி ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோரால் பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து போலவே கிரிக்கெட்டிலும் இந்த புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.