ஐசிசி 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணி அறிவிப்பு – மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடிப்பு

0
1081
Kane Williamson and Ravichandran Ashwin

ஐசிசி தரப்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடிய டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் வெளியிடுவது வழக்கம். தற்பொழுது கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

ஓபனிங் வீரர்கள்

கடந்த ஆண்டு இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா ( 906 ரன்கள் ) மற்றும் இலங்கை அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த டிமுத் கருணாரத்னே ( 902 ரன்கள் ) ஓபனிங் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் இரண்டாவது வீரராக ரோஹித் ஷர்மாவும், அவரை பின் தொடர்ந்து 3-வது வீரராக டிமுத் கருணாரத்னே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நம்பர் 3 மற்றும் நம்பர் 4 வீரர்கள்

இவர்களைப் பின்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மார்னஸ் லாபஸ்சாக்னே மற்றும் ஜோ ரூட் இடம்பெற்றுள்ளனர். மார்னஸ் லாபஸ்சாக்னே கடந்த ஆண்டு 526 ரன்கள் குவித்துள்ளார். மறுபக்கம் ஜோ ரூட் கடந்த ஆண்டு மட்டும் 1708 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் அதிக ரன்களைக் குவித்த வீரராக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அணியின் கேப்டன்

அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் உள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு 395 டெஸ்ட் ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை (2019-2021) கைப்பற்றி முத்திரை பதித்தார்.

நம்பர் 6 மற்றும் நம்பர் 7 வீரர்கள்

கேன் வில்லியம்சனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஃபவாத் அலம் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக ஃபவாத் அலம் 571 ரன்களும் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் 248 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

அணியின் பந்துவீச்சாளர்கள்

இறுதியாக பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், கைல் ஜேமிசன், ஹசன் அலி மற்றும் ஷஹீன் அப்ரிடி உள்ளனர். இவர்களில் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 54 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 47 விக்கெட்டுகளுடன் ஷஹீன் அப்ரிடியும், மூன்றாவது இடத்தில் 41 விக்கெட்டுகளுடன் ஹசன் அலியும், 27 விக்கெட்டுகளுடன் 12ஆவது இடத்தில் ஜேமிசன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணி

டிமுத் கருணாரத்னே, ரோஹித் ஷர்மா, மார்னஸ் லாபஸ்சாக்னே, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ( கேப்டன் ), ஃபவாத் அலம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், கைல் ஜேமிசன், ஹசன் அலி மற்றும் ஷஹீன் அப்ரிடி