இந்திய கிரிக்கெட்டில் தற்பொழுது திறன்மிகுந்த நிறைய புதிய இளம் வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரின் தாக்கம் நிறைய இளம் வீரர்களை உருவாக்குவதோடு களத்திற்கும் கொண்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து இந்த மூன்று ஆண்டுகளில் திலக் வர்மா, ரிங்கு சிங், சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஜெய்ஸ்வால் என நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்கள்.
இதில் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிர்ஷ்டம் என்னவென்றால், கிடைத்திருக்கும் புதிய வீரர்கள் எல்லோரும் வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதுதான். இதன் மூலமாக அனைத்து திறமைகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் இசான் கிஷான் இடத்தில், மேலும் ஒரு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா விளையாடும் வாய்ப்பை பெற்றார். இவர் விதர்பா மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.
நேற்றைய போட்டியிலும் இக்கட்டான நிலையில் களத்திற்கு வந்து அழுத்தத்தை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக மூன்று சிக்ஸர்களை அடித்து, அந்த சூழ்நிலையை அப்படியே இந்திய அணியின் பக்கம் திருப்பி தந்தார். 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியே இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
நேற்று போட்டி முடிந்த பிறகு பேசிய ஜிதேஷ் சர்மா கூறும் பொழுது “ஆரம்பத்தில் நான் ரிங்கு உடன் அதிகம் பேசவில்லை. ஆனால் லட்சுமணன் சார் என்னை என்னுடைய ஆட்டத்தை நம்ப சொன்னார். நான் எப்படி விளையாடுவேனோ அதேபோல விளையாட சொன்னார். அவர் எப்பொழுதும் நான் எப்படி தயாராகிறேனோ அதை ஆதரிக்கக் கூடியவராக இருக்கிறார். உங்கள் தயாரிப்பு சரியாக இருந்தால், விளைவுகள் தானாக வரும் என்பது அவரது கருத்து.
பின்னர் நான் ரிங்குவிடம் பேசும் பொழுது, விளையாட்டை ஆழமாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆப்-ஸ்பின்னர் வந்தால் நான் முற்றிலும் அதிரடியாக விளையாடப் போவதாக அவரிடம் சொல்லிவிட்டேன். அதேபோல் லெக்-ஸ்பின்னர் வந்தால், அவர் அடிப்பதாகச் சொன்னார். இதுதான் எங்களுடைய கேம் ப்ளான் ஆக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!