“நான் பயந்துட்டேன் அதான் என் இடத்துல அவர பேட்டிங் பண்ண சொன்னேன்” – ஓப்பனாக பேசிய கௌதம் கம்பீர்.!

0
4105

கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வீரர். இந்திய அணியின் வெற்றிக்காக இவர் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி இருந்தாலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியிலும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகைக்கோப்பை போட்டியிலும் ஆட்டநாயகன் விருது பெற்று இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இந்த இரண்டு இன்னிங்ஸ்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கம்பீர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியின் ஆலோசகராகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் மாஸ்டர் டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார்

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்கள் குறித்து இவர் அளிக்கும் பேட்டிகள் பெரும்பாலும் சர்ச்சையில் சென்று முடிந்து விடுகிறது. மற்ற வீரர்களை போல் இல்லாமல் மனதில் தோன்றும் கருத்தை ஒளிவு மறைவின்றி மிகவும் தைரியமாக கூறக்கூடிய ஒருவர் கௌதம் கம்பீர். இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே கேப்டனுமான எம் எஸ் தோனி குறித்து கூறும் கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும்.

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் போது கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே மைதானத்தில் வைத்து நடைபெற்ற மோதல் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்விலேயே மிகவும் பயந்த ஒரு தருணம் பற்றி மனம் திறந்து ஓப்பனாக பேசியிருக்கிறார் கம்பீர். இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நடைபெற்றது எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .

இது குறித்து விரிவாக பேசிய கம்பீர் ” என்னுடைய மொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலும் நான் அதிகமான அழுத்தம் மற்றும் பயத்தை உணர்ந்தது 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான். அந்த ஐபிஎல் சீசனில் துபாயில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து டக் அவுட் ஆனேன். இதனால் நான்காவது போட்டியில் துவக்க வீரராக களம் இறங்க எனக்கு பயமாக இருந்தது . அணியின் கேப்டனாக இருந்ததால் மனிஷ் பாண்டேவை துவக்க வீரராக களம் இறங்கும்படி கேட்டுக் கொண்டேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அந்தப் போட்டியில் மனிஷ் பாண்டேவும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் மூன்றாவது வீரராக களம் இறங்கிய நான் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தேன். அப்போது மனிஷ் பாண்டேவிடம் இன்னொரு முறை இவ்வாறு கேட்க மாட்டேன் என தெரிவித்தேன். மேலும் அவரை துவக்க வீரராக களமிறங்க கேட்டுக் கொண்டதற்காக நான் என் வாழ்க்கையில் வெட்கப்பட்ட தருணம் அதுதான்” என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் ” தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததால் நான் அழுத்தத்தை உணர்ந்தேன் மேலும் மிகவும் பதட்டமாகவும் இருந்தேன். ஆனால் உங்களுடைய மன வலிமை மற்றும் தைரியம் எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் தைரியத்தை கொடுக்கும் . அது போன்று தான் எனக்கும் நடந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்த போட்டியில் நான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினேன் . என் வாழ்க்கையில் நான் அடித்த மிக முக்கியமான பவுண்டரி அதுவாகும் . என் ஐ பி எல் வாழ்க்கையை காப்பாற்றிய பவுண்டரி அது என தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மோசமாக விளையாடிய கொல்கத்தா அணி இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதோடு அந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.