“ஆர்சிபி மேல் நான் கோபமாக இருந்தேன்; நான் அதிக சம்பளம் கேட்கவில்லை” – சாகல் மனம் திறந்த பேட்டி!

0
211
Chahal

இந்திய கிரிக்கெட்டில் அனில் கும்பளேவிக்கு பிறகு நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராக கிடைத்தவர் யுஸ்வேந்திர சாகல். இவர் இவரைப் போன்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுடன் சேர்ந்துதான் அஸ்வின் ரவீந்திர ஜடேஜாவின் வெள்ளைப் பந்து கூட்டணிக்கு முடிவு கட்டினார்!

ஆரம்பத்தில் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக வந்தாலும், பிறகு 6 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு எட்டு ஆண்டுகள் 140 போட்டிகள் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான மிகவும் சிறிய மைதானமான பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர் சாகல்தான். இப்படி இருந்தும் கூட இவரை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பெங்களூர் அணி விட்டது. மேலும் ஏலத்திலும் இவரை வாங்கவில்லை.

இவரை அந்த ஏலத்தில் 6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல் அணி வாங்கியது. அதே ஆண்டு 27 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான பர்பிள் தொப்பியை வென்றார். மேலும் இந்த ஆண்டு 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரது இடத்தை பெங்களூர் அணி நிர்வாகத்தால் நிரப்பவே முடியவில்லை.

தற்பொழுது இவரை திரும்ப பெங்களூர் வாங்காதது குறித்து பேசி உள்ள சாகல்
“நிச்சயமாக நான் வருத்தப்பட்டேன். எனது பயணம் ஆர்சிபி உடன் துவங்கியது. அவர்களுடன் நான் எட்டு ஆண்டுகள் கழித்தேன். ஆர்சிபி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. நான் அவர்களால் இந்திய அணிக்குள்ளும் நுழைந்தேன். முதல் போட்டியில் இருந்து விராட் கோலி பைய்யா என் மீது நம்பிக்கை வைத்தார். எட்டு வருடத்தில் அந்த அணி எனக்கு குடும்பம் ஆகிவிட்டது.

- Advertisement -

நான் அதிக பணம் கேட்டதாலே என்னை வாங்கவில்லை என்ற ஒரு கருத்து வெளிவந்திருந்தது. அதற்குதான் நான் ஒரு பேட்டியில் அதிக பணம் கேட்கவில்லை என்று கூறியிருந்தேன். எனக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து எந்த போன் கால்களும் வரவில்லை. இதுதான் எனக்கு மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது.

நான் அவர்களுக்காக 140 மேட்ச்கள் விளையாடினேன். உனக்காக ஏலத்தில் எவ்வளவு பணம் செலவானாலும் எடுப்பேன் என்று கூறினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. நான் ஏலத்திற்குப் பிறகு மிகவும் கோபமடைந்தேன். நான் அவர்கள் அணிக்கு எட்டு ஆண்டுகள் கொடுத்தேன். எனக்கு பெங்களூர் மைதானம் மிகவும் பிடித்தது. ராஜஸ்தான் பெங்களூர் அணிகள் மோதிய அந்த வருடத்தின் முதல் போட்டியில் நான் ஆர்சிபி பயிற்சியாளர்களுடன் பேசவில்லை.

ராஜஸ்தான் ராயல் அணியில் நான் சேர்ந்தவுடன் ஒரு நல்ல விஷயம் நடந்தது. நான் அங்கு டெத் பவுலராக அறிமுகப்படுத்தப்பட்டேன். பெங்களூரு அணியில் 16வது 17வது ஓவரில் என் மொத்த ஓவர்களும் முடிந்துவிடும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனது கிரிக்கெட் ஐந்து முதல் பத்து சதவீதம் மேம்பட்டது. ஆர்சிபி மற்றும் பெங்களூர் மைதான ரசிகர்களிடம் இன்னும் எனக்கு ஒரு இணைப்பு இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு மிகவும் உதவி செய்திருக்கிறது!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்!