“மஹி பாயை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். அவர் சொல்வதை மட்டும்தான் செய்தேன்” – சாகல் ஓபன் டாக்!

0
2702
Chahal

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த பொழுது இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணிகளில் விரல் சுழற் பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா பிரதான சுழற் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள்!

மகேந்திர சிங் தோனிக்கு அடுத்து விராட் கோலி கேப்டனாக வந்த பிறகு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சாகல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பிரதான சுழற் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள்.

- Advertisement -

இந்த ஜோடியின் ஆரம்ப காலகட்டத்தில் இவர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருந்தது. பின்பு திடீரென இவர்களது பந்துவீச்சு அடி வாங்க ஆரம்பித்தது. எதிரணியின் வீரர்கள் இவர்களது பந்து வீச்சை படித்து விட்டார்கள் என்று பல பேர் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் என்னவென்றால் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றதுதான் இவர்களது சரிவுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இதை இவர்கள் இருவருமே பின் நாட்களில் பேசியும் இருந்தார்கள்.

தற்பொழுது சாகல் மகேந்திர சிங் தோனி குறித்து பேசும்பொழுது ” அவர் ஒரே ஒரு நபரின் முன்னால்தான் நான் வாய் கட்டப்பட்டவனாக அமைதியாக இருந்திருக்கிறேன். அவர் சொல்வதை மட்டுமே நான் அதிகம் கேட்டு இருக்கிறேன். அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே நான் பேசுவேன் இல்லை என்றால் அமைதியாக இருப்பேன்.

நாங்கள் ஒரு சமயம் செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் நான் முதன்முறையாக நான்கு ஓவர்களுக்கு 64 ரன்கள் விட்டுக் கொடுத்தேன். கிளாசன் என்னை அடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் மகேந்திர சிங் தோனியிடம் ரவுண்ட் த ஸ்டெம்ப் வந்து வீசவா என்று கேட்டேன். அவரும் சரி வீசு என்றார். அப்பொழுதும் என் பந்து அடி விழுந்தது.

- Advertisement -

நான் திரும்பி நடந்து கொண்டிருந்த பொழுது என்னிடம் வந்த மஹி பாய் ‘இன்று உன்னுடைய நாள் கிடையாது. அதனால் பரவாயில்லை’ என்று சொன்னார். மேலும் நான் வீச இருந்த ஐந்து பந்துகளை சரியாக வீசினால் அது அணிக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். இப்படி ஒருநாள் சரியாக அமையாவிட்டால் கூட அணிக்கு உதவியாக இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

அந்த ஓவரில் இல்லை அடுத்த ஓவரில் எனக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. அவர் மீதான அந்த கண்மூடித்தனமான நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நான் அவருடைய ரசிகன். ஒரு பந்துவீச்சாளரான எனக்கு அவர் 50 சதவீத வேலையை எளிமையாக்கினார். மஹி பாய் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு எங்களுக்கு சொல்லுவார். ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருந்தால் நாங்கள் உடனடியாக தாக்குதலை ஆரம்பித்து விடுவோம்.

நான் அவரை கண்மூடித்தனமாக நம்பினேன். அவர் என்னிடம் ஏதாவது சொன்னால் நான் அதை அப்படியே பின்பற்றுவது வழக்கம். 95 சதவீதம் அவர் சொல்வதை நான் கேட்பதும், மீதி 5% என் பக்கத்தில் இருந்து அவரிடம் நான் சொல்வதும்தான் வழக்கம். நாங்கள் பத்து ஓவர்களுக்கு பிறகுதான் பந்து வீச வருவோம். இந்த பத்து ஓவர்களில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று அவர் மிக நன்றாக புரிந்து வைத்திருப்பார். இது எங்களுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கியது!” என்று கூறியிருக்கிறார்!