“பாபர் அசாம் பத்தி சொல்ல கூடாதுனு நினைச்சேன்.. ஆனா இப்ப இத சொல்லனும்!” – ஆப்கான் குர்பாஸ் பரபரப்பு பேச்சு!

0
416
Gurbaz

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் பாதிப்படைந்த அணியாக பாகிஸ்தான் அணிதான் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய கடைசி போட்டி வரை அரையிறுதி வாய்ப்பிலும் இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய சூறாவளி ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த தோல்விதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி சிறிய அணி என்பதை விட, அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே சில கொந்தளிப்பான நிலைமைகள் இருக்கின்றன. எனவே பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முதலில் பேட்டிக் செய்து 280க்கும் மேல் ரன்களை கொண்டு வந்தது. இது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நல்ல ஸ்கோர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் அணி அதை விரட்டி வென்றது. மிகக்குறிப்பாக ஆப்கானிஸ்தான் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து வென்றது.

இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களுக்கு வழி வகுத்து விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் பாகிஸ்தான் அணியிலும் உலகக் கோப்பைக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் அதிரடியாக தன்னை விடுவித்துக் கொண்டார்.

- Advertisement -

தற்பொழுது அந்தப் போட்டி குறித்து பேசி உள்ள ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் கூறும்பொழுது “அந்த நிமிடம் என்னால் பாபரை மறக்கவே முடியாது. நான் பாபரிடம் அவர் பேட்டை கேட்டேன். அவர் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு வீரராக அப்பொழுது பாபர் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்று என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தப் போட்டியில் நானும் உணர்ச்சிவசப்பட்டதை நினைவில் வைத்திருக்கிறேன். பாபர் அசாம் சிறந்த வீரர்களில் ஒருவர்; சிறந்த கேப்டன்களில் ஒருவர்.

நான் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் தற்போது இதை சொல்லித்தான் ஆக வேண்டும். பாபர் அப்பொழுது அழுதார். அவர் மிகவும் ஏமாற்றமாக இருந்தார். மேலும் எல்லோரும் அவருக்கு எதிராக இருந்தார்கள். ஆனால் நான் பாபர் அசாமுக்கு சல்யூட் செய்கிறேன். அவர் விட்டுத்தராமல் இறுதிவரை எடுத்துச் சென்றார்!” என்று கூறியிருக்கிறார்!