இன்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட முதல் போட்டியில், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இன்று துவங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி முதலில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்தது.
அவர்கள் முடிவு எடுத்தபடி அவர்களை சிறப்பாக செயல்பட விடாமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சு செயல் திறனை வெளிப்படுத்தினார்கள்.
அர்ஸ்தீப் சிங் 10 ஓவர்களில் 37 ரன்கள் மட்டும் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ஆவேஸ் கான் எட்டு ஓவர்களுக்கு மூன்று மெய்டன்கள் செய்து, 27 ரன்கள் மட்டும் விட்டுத் தந்து நான்கு விக்கெட்டை கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்க அணி இறுதியாக 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் எந்த பேட்ஸ்மேன்களும் 33 ரன்கள் தாண்டி அடிக்கவில்லை.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுக்க, பதினாறு புள்ளி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடந்த முறை இதே தென் ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கேஎல்.ராகுல் மொத்தமாக தோற்றார். தற்பொழுது வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறார்.
வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கேஎல்.ராகுல் “கடந்த முறை இங்கு ஒரு கேப்டனாக மூன்று போட்டிகளிலும் நான் தோல்வி அடைந்தேன். தற்பொழுது இங்கேயே வெற்றியுடன் ஆரம்பிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு ஆடுகளத்தில் நல்ல உதவி இருந்தது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் எப்படி விளையாடுகிறது என்று பார்க்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் சில குறிப்பிட்ட வடிவங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே அந்தந்த நேரத்தில் சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது ஆகிறது.
இப்போது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயத்தில் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யநினைக்கும் வீரர்களை நாங்கள் தேர்வு செய்ய விரும்புகிறோம். எங்கள் வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் இருந்து சிறந்த அனுபவம் இருக்கிறது. அவர்களும் வாய்ப்பை பெறுவது நல்ல விஷயம்!” என்று கூறி இருக்கிறார்!