“நீங்க கேட்டதால சொல்றேன்.. இந்த வாட்டி உலகக்கோப்பை இவங்களுக்கு தான்”.. முத்தையா முரளிதரன் கணிப்பு.!

0
16121

சர்வதேச கிரிக்கெட்டில் உலகக் கோப்பை என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகும். இந்த வருடத்திற்கான உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது. பத்து நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் குழுக்களாக பிரிக்காமல் மொத்தமாக எல்லா அணிகளும் ஒவ்வொரு முறை ஒரு அணியுடன் மோத உள்ளன.

இதனால் மொத்தம் 45 லீக் போட்டிகள் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன 45 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை திருவிழாவில் முதல் போட்டியும் இறுதிப் போட்டியும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது .

- Advertisement -

இந்த உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி சென்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. உலகக்கோப்பை துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் போட்டிகளைப் பற்றிய கணிப்புகள் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது போன்ற அனுமானங்கள் தற்போதையிருந்தே கிரிக்கெட் விமர்சகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 2023 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்பது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் முத்தையா முரளிதரன் ” ஆசிய நாடான இந்தியாவில் வைத்து உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் நிலவுவதை மறுக்க முடியாது.

ஆடுகளத்தின் சூழ்நிலை எப்போதுமே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் . நீங்கள் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்தில் விளையாடவில்லை. இந்தியாவில் விளையாடுகிறீர்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன . இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும் நல்ல கிரிக்கெட் விளையாடுகின்றன என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” ஒவ்வொரு அணிக்கும் அதற்குரிய பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளது . உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நம்மால் எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாது. அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் அணிகள் அனைத்தும் சம பலத்துடனே இருக்கும் . அதிலிருந்து எந்த அணி வெற்றி பெறும் என்று கூறுவது கடினம் தான். லீக் போட்டிகளில் நடைபெறும் தவறுகளை அணிகள் நாக்கவுட் சுற்றுக்கு செல்லும்போது சரி செய்து பலமாக இருக்கும். எனினும் இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக விளக்கமாக பேசிய அவர் ” இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடுவதால் ஆடுகளத்தின் சாதகம் அதிகமாக இருக்கிறது . அதனால் இந்த முறை இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்திய அணி 2011 இல் உலக கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த முறையும் கைப்பற்ற வாய்ப்புகள் நிறைய இருக்கிறது” என்று கூறி முடித்தார் .