ஆசிய கோப்பை விருது பரிசுத்தொகை எவ்வளவு?.. மைதான ஊழியர்களுக்கும் பரிசுத்தொகை.. முழு விவரங்கள் இதோ!

0
24971
20230917_215433

பதினாறாவது ஆசியக் கோப்பை இன்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட இறுதி போட்டியில் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியை ரசிகர்கள் மிக எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்திய அணி இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டி, இலக்கை 6.1 ஓவரில் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணிக்கு இரண்டாவது ஆசிய கோப்பை வெற்றியாகும்.

மேலும் இந்தத் தொடரில் யார் அதிக ரன்? யார் அதிக விக்கெட்? மேலும் வழங்கப்பட்டிருக்கும் பரிசுத் தொகைகள் எவ்வளவு? சிறப்பு பரிசுகள் எவ்வளவு? என்பது குறித்து இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

அதிக ரன் அடித்த வீரர்… இந்திய அணியின் இளம் வலது கை துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆறு போட்டிகளில் 302 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். ரன் சராசரி 75.

- Advertisement -

அதிக விக்கெட் எடுத்த வீரர்… இலங்கை அணியின் இளம் வலது கை வேகம் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா ஆறு போட்டிகளில் 11 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். பவுலிங் ஆவரேஜ் 24.54. எக்கானமி 6.61.

ஸ்மார்ட் கேட்ச்… இந்த விருது முகமது சிராஜ் பந்துவீச்சில் பதும் நிசாங்க கேட்ச்சை பாயிண்ட் திசையில் பிடித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பரிசு தொகை 3000 டாலர்கள். இந்திய மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

ஆட்டநாயகன் விருது… இந்த போட்டியில் ஏழு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றிய முகமது சிராஜ்க்கு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை 5000 டாலர்கள். இந்திய மதிப்பில் 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய். இதை சிராஜ் மைதான ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

தொடர் நாயகன் விருது… இந்திய அணியின் சைனா மேன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஐந்து போட்டிகளில் 9 விக்கெட் எடுத்ததற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தொகை 15,000 டாலர்கள். இந்திய மதிப்பில் 12 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்.

இறுதிப் போட்டியில் தோற்ற அணியான இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை 75 ஆயிரம் டாலர்கள். இந்திய மதிப்பில் 62 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்.

மேலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள். இந்திய மதிப்பில் ஒரு கோடியே 24 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்.

இந்த பரிசு தொகைகள் இல்லாமல் ஓயாத மழைக்கு இடையே மிகச் சிறப்பாக செயல்பட்ட மைதான ஊழியர்களுக்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 50,000 டாலர் பரிசுத் தொகையாக வழங்கியிருக்கிறது. தோராயமாக இந்திய மதிப்பில் 40 லட்ச ரூபாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது!