இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் இறுதி தொடராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என தற்பொழுது சமநிலையில் முடிந்திருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் கேப் டவுன் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் அபாரமாக பந்து வீசி 15 ரன்களுக்கு ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, பர்கர், நிகிடி தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிரடியாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 103 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பத்து வீசிய பும்ரா ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 23 பந்தில் 28 ரன், கில் 11 பந்தில் 10 ரன், விராட் கோலி 11 பந்தில் 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் ரோஹித் சர்மா 22 பந்தில் 16 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 6 பந்தில் நான்கு ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள். இதன் மூலம் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் முடிந்தது.
இந்திய அணியின் வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற முகமது சிராஜ் பேசும்பொழுது “உண்மையை சொல்வது என்றால் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இது எனக்கு சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. நான் சீராக இருக்கவும் மேலும் சரியான பகுதிகளில் பந்து வீசவும் நினைத்தேன். நான் முதல் போட்டியில் நிலையாக இல்லை. அதனால்தான் நாங்கள் நிறைய ரன்களை கசிய விட்டோம்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக சரியான இடங்களில் வீச நான் கடுமையாக உழைத்தேன். மேலும் ஒரே லென்ந்தில் இருக்கவும் முயற்சி செய்தேன். நானும் பும்ராவும் இணைந்து விளையாடும் பொழுது, அவருக்கு ஆடுகளம் குறித்து முன்கூட்டியே எல்லா செய்தியும் தெரிந்துவிடும். நாங்கள் ஆடுகளத்தை எப்பொழுதும் சீக்கிரம் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ரசிகர்களுக்கு மிகுந்த நன்றி தொடர்ந்து ஆதரவாக இருங்கள்!” என்று கூறி இருக்கிறார்!