எனது ஓய்விற்கு பிறகு, போதைக்கு அடிமையாக இருந்தேன் என் வாழ்வில் அந்த ஒரு சம்பவம் தான் என்னை மாற்றியது என்று சமீபத்திய பேட்டியில் மனம் உருகி பேசியுள்ளார் வாசிம் அக்ரம்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணிக்காக 1984 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 1992 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தார்.
2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறும் பொழுது கிட்டத்தட்ட 900 க்கும் அதிகமான விக்கெட்களை பெற்றிருந்தார். இடது கை வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக விக்கேட்டுகளை கைப்பற்றியவராக இவர் இருக்கிறார். பல இடது கை வேகம் பந்துவீச்சாளர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சமீபத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை தொடரில் அசத்தி வரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங் இவரை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கிறார்.
அந்த அளவிற்கு கிரிக்கெட் உலகில் பலரையும் ஈர்த்துள்ள வாசிம் அக்கரம் சமீபத்தில் ஓய்வு பெற்ற பிறகு, தான் எந்த ஒரு நிலையில் இருந்தேன் என்பது பற்றி பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதில் இருந்தே இன்னும் அந்நாட்டின் ரசிகர்கள் மீளவில்லை. தற்போது வாசிம் அக்ரம் இப்படி கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
“எனது ஓய்விற்கு பிறகு மெல்ல மெல்ல என் வாழ்வில் போதைப்பொருள் வந்தது. இங்கிலாந்தில் ஒரு பார்ட்டி சென்றபோது முதலில் இதை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். பிறகு நாளுக்கு நாள் அது எடுத்துக் கொள்வது வளர்ந்து கொண்டே இருந்தது.
அந்த சமயத்தில் எனது மனைவி தனியாக இருக்கிறார் என்பதை நான் உணரவில்லை. அடிக்கடி என்னிடம் நான் கராச்சிக்கு செல்கிறேன், எனது பெற்றோரிடம் வாழ விரும்புகிறேன் என்று கூறுவார். நான் தான் வற்புறுத்தி இருக்க வைத்தேன். அப்போது எனக்கு புரியவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படி போதையுடன் நான் செல்வதை கண்டு அவர் எப்படி மனமடைந்திருப்பார் என்று பின்னர் தான் உணர்ந்தேன்.
2009 ஆம் ஆண்டு எனது மனைவி என்னை விட்டு பிரிந்த போது தான் நான் முழுமையாக உணர்ந்தேன். அதன் பிறகு இந்த போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டேன். தற்போது வரை நான் அந்தப் பக்கம் செல்லவில்லை. இனியும் செல்ல மாட்டேன்.
என் வாழ்வில் மறக்க முடியாத இழப்பு எனது மனைவி என்னை விட்டு பிரிந்தது தான். தென் ஆசியாவில் இது மிகவும் இயல்பான பழக்கமாக இருக்கிறது. போதைப்பொருள் மற்றும் சில பழக்கவழக்கங்களை இளம் வயதிலேயே எடுத்துக் கொள்வது அதிகரிக்கிறது.
நான் அதிலிருந்து முழுமையாக வெளிவந்து விட்டேன் என்ற காரணத்திற்காகத்தான் எனது இருண்ட பக்கங்களை வெளியில் கூறுகிறேன். இது பலருக்கு உதாரணமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.” என பகிர்ந்து கொண்டார்.
ஜாம்பவானாக பார்க்கப்படும் வாசிம் அக்ரம் இப்படி பகிரங்கமாக உண்மையை கூறியது பலருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தாலும் தற்போது அவர் இருக்கும் இடம் பலருக்கு ஆறுதலாகவும் ரோல் மாடலாகவும் தெரிகிறது.