இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் ஜஸ்ப்ரீத் பும்ரா இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்திய அணி கலந்து கொண்ட ஆசியக் கோப்பை டி20 உலக கோப்பை உள்ளிட்ட போட்டிகளிலும் காயம் காரணமாக இவர் பங்கேற்கவில்லை.

இந்த வருட துவக்கத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இவர் சேர்க்கப்பட்ட நிலையில் முற்றிலுமாக உடல் தகுதி பெறவில்லை என அந்தப் போட்டியில் இருந்தும் வெளியேறினார் . தற்போது இவரது காயத்திற்கு நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அறுவை சிகிச்சையின் காரணமாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு இவரால் கிரிக்கெட் விளையாட முடியாது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் பும்ராவின் காயம் பற்றி ஸ்போர்ட்ஸ் தக் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் .

இதுபற்றி பேசி இருக்கும் சோயப் அக்தர் ” பும்ரா ஃப்ரண்ட் ஆன் ஸ்டைலில் பந்து வீசுகிறார் .அந்த ஸ்டைலில் பந்து வீசுவதற்கு முன் லோட் செய்யும் போது முதுகு தண்டின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதுதான் அவரது காயத்திற்கு முக்கிய காரணம் . என்னைப் போன்ற பந்துவீச்சாளர்கள் சைடு ஆண் ஸ்டைலில் பந்து வீசினோம். அவ்வாறு வீசும் போது இடுப்பு, தொடைகள், இடது கையிலிருந்தும் உதவி பெறலாம். இது முதுகு தண்டிற்கு கிடைக்கின்ற அழுத்தத்தை ஈடு செய்யும் . ஃப்ரெண்ட் ஆண் ஸ்டைலில் நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்கள் முதுகு தண்டிற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதை தவிர்க்க முடியாது”என தெரிவித்தார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அக்தர்” அவர் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு நிச்சயமாக அவருக்கு காயத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. மூன்று வடிவ கிரிக்கெட்டுகளிலும் தொடர்ச்சியாக அதிகமான போட்டிகளில் ஆடினார். இந்தியா அவரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக நிர்வகித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் எந்த ஃபார்மட்டில் விளையாட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்

- Advertisement -

“நான் இந்திய அணியின் நிர்வாகத்தில் இருந்தால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் தான் அவரை விளையாட அனுமதிப்பேன். அதிகமான பயிற்சி மற்றும் குறைவான போட்டிகள் தான் அவர் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாட உதவும்” என்று கூறி முடித்தார் அக்தர்