டி20 உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்த மூன்று அணிகளுள் ஒன்று தான் – ஹெர்ஷெல் கிப்ஸ்

0
2585
Herschelle Gibbs

தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹெர்ச்செல் கிப்ஸ். சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய விதமாக செய்திகளில் வந்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் காஷ்மீர் பிரிமியர் லீக் என்ற தொடரை நடத்த, அதில் ஆட சம்மதம் தெரிவித்திருந்தார் கிப்ஸ். அதற்கு இந்திய கிரிக்கெட் எதிர்ப்பு தெரிவித்து, இந்தத் தொடரில் ஆடினால் அடுத்து இந்தியாவிற்குள் கிரிக்கெட் தொடர்பான எந்த ஒரு காரணத்திற்கும் நுழைய முடியாது என மிரட்டல் விடுத்திருந்தது. விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று கூறியிருந்தார் கிப்ஸ்.

இந்நிலையில், இந்தாண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கும் அணிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பையைக் கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாக கிப்ஸ் கூறியுள்ளார். மேலும் இது வெறும் கணிப்பு தான் என்றும் திடீரென இலங்கை வங்கதேசம் போன்ற அணிகள் கூட வெல்லலாம். ஆனால் தற்போது எனது கணிப்பு இந்த மூன்று அணிகள் தான் எனக் கூறியுள்ளார் கிப்ஸ்.

- Advertisement -
India vs Pakistan T20I WC
Photo: Getty Images

மைதானங்களின் தன்மையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார் கிப்ஸ். ஒரு வேளை மைதானம் ஸ்பின்னுக்கு ஒத்துழைத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெரிதாக சாதிக்காது என்றார் அவர். மேலும் தற்போதைய சிறந்த டி20 பேட்டிங் வீரர்கள் யார் என்று கேட்டதற்கு பாபர், கோலி, பட்லர் என மூன்று வீரர்களைக் குறிப்பிட்டுள்ளார் கிப்ஸ். மேலும் ஸ்டீவன் ஸ்மித், டிவில்லியர்ஸ் ஆகியோரும் எந்த தன்மையான மைதானங்களிலும் ஆடக் கூடியவர்கள் என்று கிப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிலைத்து நின்று ஆடும் வீரர்கள் பெரிதாக இல்லாதது ஒரு இழப்பு என்றும் கூறினார். தற்போது ஹெர்ஷெல் கிப்ஸ் காஷ்மீர் பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.