இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு உலகக் கோப்பை கிடைத்திருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் அது குறித்தான உற்சாகம் கரை புரள்கிறது. மேலும் மீடியாக்களில் உலகக் கோப்பை வெற்றியை ஒட்டி பல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலக கோப்பையில் கொடுக்கப்படும் மெடல்களை வீரர்கள் கடிப்பது ஏன் என்பதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்தால் டி20 உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் கைப்பற்றியவராக அர்ஸ்தீப் சிங் வந்தார். இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக கேப்டன் ரோகித் சர்மா விளங்கினார். மேலும் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் வெற்றி பெற்ற அணிக்கு 20 கோடிக்கு மேலும் தோல்வி அடைந்த அணிக்கு பத்து கோடிக்கும் மேலும் பரிசு தொகை வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட 20 அணிகளுக்குமே, அவர்கள் தொடரில் எந்த அளவை எட்டினார்கள் என்பதைப் பொறுத்து பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது.
இதைத் தாண்டி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மட்டும் இல்லாமல் பதக்கமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதக்கம் பெற்ற வீரர்கள் பதக்கத்தை வாயில் கடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருப்பார்கள். நிறைய ரசிகர்களுக்கு பதக்கத்தை வீரர்கள் கடித்து போஸ் தருவது ஏன்? என்பது தெரியாது.
ஒலிம்பிக்கில் ஆரம்ப காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை, அது தங்கமா? என்று உறுதி செய்வதற்கு வாயில் கடித்து பார்ப்பார்கள். தங்கம் மற்ற உலோகங்களை விட கொஞ்சம் மென்மையானது என்பதால், கடித்தால் பற்களின் குறி பதக்கத்தில் படும். இதை வைத்து அந்தக் காலத்தில் அது தங்கம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். ஏனென்றால் அப்பொழுது தங்கம் கரன்சி போலவும் பயன்பட்டு வந்தது.
இதையும் படிங்க : டி20 ஐசிசி ரேங்கிங்.. நம்பர் 1 இடத்தை தட்டி தூக்கிய ஹர்திக் பாண்டியா.. இந்திய வீரர்கள் கிடுகிடு முன்னேற்றம்
தற்பொழுது தங்கமா? என கண்டறிய நிறைய நவீன வழிமுறைகள் வந்துவிட்டன. மேலும் வீரர்களும் தங்கமா என்று கண்டறிவதற்குப் பதக்கத்தை வாயில் கடிப்பதில்லை. மாறாக ஆதியில் ஒலிம்பிக்கில் வந்த வழிமுறை அப்படியே ஒலிம்பிக்கில் தொடர்ந்து வந்து, அது தற்பொழுது கிரிக்கெட் வீரர்கள் இடையேயும் பரவி இருக்கிறது. மேலும் போட்டோகிராபர்கள் வீரர்களை இப்படி போஸ் கொடுக்குமாறு கூறுவது, கிரிக்கெட் வீரர்களும் இந்த ஒலிம்பிக் பழக்கத்தை தொடர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே கிரிக்கெட் வீரர்கள் ஒலிம்பிக்கில் இருந்து இதையொரு பழக்கமாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.