இந்தியாவில் வைத்து இந்தியாவை இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது.
இந்திய மண்ணில் இந்தியாவை ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வது என்பது ஒரு சாதனைதான். அந்த அளவிற்கான விதிவிலக்கான ஆட்டத்தை விளையாடினால் மட்டுமே இந்திய அணியை இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்த முடியும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை அதற்கு நேர் எதிரான முறையில் அதிரடியாக அணுகி வரும் இங்கிலாந்து, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில், உலகத்தரமான இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு, இந்த வெற்றியை பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் மூன்று உலக தரமான ஸ்பின்னர்கள் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மிகவும் தடுமாற்றமாகவே இருந்தார்கள். அவர்களால் விக்கெட்டுகளை கொண்டு வர முடியவில்லை.
ஆனால் இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இங்கிலாந்து அணி மீண்டும் வந்தது போலவே அவரும் தன்னுடைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வந்திருக்கிறார். போப் மற்றும் ஹார்ட்லி இருவரது தனிப்பட்ட ஆட்டங்களால்தான் இங்கிலாந்து வென்று இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து பேசி உள்ள லெஜெண்ட் அனில் கும்ப்ளே கூறும்பொழுது ” கடந்த இரண்டு நாட்களாக இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அதே சமயத்தில் இந்தியா மிகவும் சாதாரண அணியாக இருந்தது. பில்டிங் செய்யும் பொழுது இந்திய அணிகள் தலைகள் ஏமாற்றத்தில் தொங்கியதை நாம் பார்த்தோம். இங்கிலாந்து அணிக்குதான் அவர்களது பேட்டிங் மற்றும் பந்து வீசிய விதத்திற்கு பெருமைகள் சேரும்.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்தியா இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும். ரோகித் சர்மா அவுட் ஆனது மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனதும் போட்டியின் போக்கை மாற்றியது.
இதையும் படிங்க : “இங்கிலாந்து அணிக்கு ஒரு ஸ்பெஷல் பழக்கம் இருக்கு.. 2 மடங்கு திருப்பிக் குடுத்திருக்காங்க” – நாசர் ஹுசைன் பேச்சு
அறிமுக வீரரான டாம் ஹார்ட்லி அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸருக்கு அடிக்கப்பட்டார். பிறகு 5 ஓவர்களில் தொடர்ந்து ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் கொடுத்தார். ஆனால் பிறகு வந்து இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்து, மேலும் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் கைப்பற்றி, இங்கிலாந்து அணி வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஒட்டு மொத்தத்தில் இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது” எனக் கூறியிருக்கிறார்.